
துபாய்,
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அண்மையில் முடிவடைந்தது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் முதலிடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 2-வது இடத்திலும் தொடருகின்றனர். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் அரைசதம் விளாசிய ரோகித் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். கிளாசென் 4-வது இடத்திலும் (ஒரு இடம் சரிவு), விராட் கோலி 5-வது இடத்திலும் (ஒரு இடம் சரிவு) உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் தொடருகிறார்.
அதேபோல் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தீக்ஷனா (இலங்கை) மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் குல்தீப் யாதவ் 3-வது இடத்திற்கு (3 இடங்கள் முன்னேற்றம்) முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜாவும் 3 இடம் முன்னெறி 10-வது இடத்திற்கு வந்துள்ளார்.
ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஒமர்சாய் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரரான ஜடேஜா ஒரு இடம் சரிந்து 10-வது இடத்தில் உள்ளார்.