
வதோதரா,
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க வீராங்கனைகள் ஆன ஹேலி மேத்யூஸ் டக் அவுட் ஆகியும், யாஸ்திகா பாட்டியா 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் கை கோர்த்த நாட் ஸ்கைவர்-பிரண்ட் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களில் ஸ்கைவர்-பிரண்ட் நிதானமாக விளையாட ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். அவர் 22 பந்துகளில் 42 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இறுதி கட்டத்தில் மும்பையின் ரன் வேகம் சற்று தளர்ந்தது. இருப்பினும் ஸ்கைவர்-பிரண்ட் அதிரடியாக விளையாடி 80 ரன்கள் அடித்து அணி வலுவான நிலையை எட்ட உதவினார். 19.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த மும்பை 164 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஸ்கைவர்-பிரண்ட் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். டெல்லி தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி களமிறங்க உள்ளது.