
லக்னோ,
5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் வதோதராவிலும், 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூருவிலும் நடந்தன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.
இதையடுத்து, இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. லக்னோவில் இன்று நடைபெற்று வரும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக தயாளன் ஹேமலதா மற்றும் பெத் மூனி களம் இறங்கினர். இதில் தயாளன் ஹேமலதா 2 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஹார்லீன் தியோல் களம் புகுந்தார். ஹார்லீன் தியோல் - பெத் மூனி இணை அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் அதிரடியாக ஆடி பெத் மூனி அரைசதம் அடித்தார். மறுபுறம் ஹார்லீன் தியோல் 45 ரன்னில் அவுட் ஆனார்.
தொடர்ந்து களம் இறங்கிய ஆஷ்லே கார்ட்னெர் 11 ரன்னிலும், டாட்டின் 17 ரன்னிலும், லிட்ச்பீல்ட் 8 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் பெத் மூனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் குவித்தது.
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 96* ரன்கள் எடுத்தார். உ.பி.வாரியர்ஸ் தரப்பில் எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 187 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி ஆட உள்ளது.