நவிமும்பை,
வெஸ்ட்இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நவிமும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவிததது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 62 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சினெல்லே ஹென்றி, டியாண்ட்ரா டாட்டின், ஹேலி மேத்யூஸ், அபி பிளெட்சர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 15.4 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 160 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 85 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.