
டுனெடின்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு மகளிர் அணிக்கெதிராக தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்றது.
இதில் முதல் ஆட்டத்தில் இலங்கையும், 2வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தன.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது டி20 போட்டி டுனெடினில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதன் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஜார்ஜியா பிம்மர் 46 ரன்களுடனும், இஸ்ஸி ஷார்ப் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மழை நீண்ட நேரமாகியும் நிற்காததால் ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.