மகளிர் சுயஉதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் இ-வர்த்தகம் மூலம் இதுவரை ரூ.24.48 லட்சம் விற்பனை

1 month ago 3

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு துணை முதல்வரின் வழிகாட்டுதலின்படி, சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு மிகப் பெரிய அளவிலான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், மதி அனுபவ அங்காடி, சிறுதானிய உணவகங்கள், மதி சந்தை விற்பனை இணைய தளம், இயற்கை அங்காடி, மதி நடமாடும் விற்பனை வாகனம், வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்பு, அடுக்குமாடி விற்பனை சந்தை போன்ற முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இணைய வழி விற்பனையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக, தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை 4 மண்டலங்களாகப் பிரித்து, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்ட தலைநகரங்களில் மண்டல அளவிலான இ-வர்த்தக சேவை முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் அமேசான், பிளிப்கார்ட், மீசோ, இந்தியாமார்ட், ஜியோ மார்ட், பூம், ஜெம் போன்ற இ-வர்த்தக முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பதிவேற்றம் செய்ய உதவி புரிந்தனர்.

இம்முகாமின் மூலமாக சுமார் 2,671 பொருட்கள் வரவழைக்கப்பட்டு அதில் 2,296 பொருட்கள் பல்வேறு இ-வர்த்தக தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இ-வர்த்தக தளங்களின் வாயிலாக இதுவரை ரூ.24.48 லட்சம் மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்விற்பனையை அதிகரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மாவட்ட அலுவலர்களுக்கு இ-வர்த்தக நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

The post மகளிர் சுயஉதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் இ-வர்த்தகம் மூலம் இதுவரை ரூ.24.48 லட்சம் விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article