
கொழும்பு,
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தான் இதுவரை ஆடிய 2 ஆட்டங்களிலும் (இலங்கை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்திய அணி கடந்த 27ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத காரணத்தினால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் மே 4ம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது.