சிவகங்கை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்த தகுதியான பயனாளிகளையும் திடீரென நீக்கியதாகப் புகார் எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியுள்ள 21 வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ளோர், 5 ஏக்கருக்கு மேல் நன்செய், 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்போர், கார் வைத்திருப்போர் விண்ணப்பிக்க முடியாது. தற்போது தமிழகம் முழுவதும் 1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பலர் மீண்டும் மேல்முறையீடு செய்து ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அதிக வருமானம் போன்ற தகுதியில்லாதோர், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.