அவசரக் கணிப்பு
மகர ராசி பெண், தனது உறவினர் மற்றும் நண்பர்கள் பற்றி யார் நெகட்டிவாக என்ன சொன்னாலும் அப்படி இருக்குமோ என்று சந்தேகிப்பார். என் நண்பர்கள், என் தோழிகள் அப்படி இல்லை என் சொந்தக்காரர்கள் அப்படி கிடையாது என்று மறுத்துப் பேச மாட்டார். அமைதியாக கேட்டுக்கொண்டே இருப்பார். தன் சொந்தக்காரர்களிடம் அதை நேரில் கேட்டு உண்மையை விசாரித்துத் தெரிந்து கொள்ள மாட்டார். உடனே கெட்டவர் என்று மனதுக்குள் தீர்ப்பு எழுதிவிடுவார். மகரராசி பெண், எல்லோருக்கும் நல்லவரராக இருப்பார். இவர் யாரையும் பகைத்துக்கொள்ளவோ, யாரிடமும் பாரபட்சம் காட்டுவதோ கிடையாது.
காதல் கல்யாணம்
மகரராசிப் பெண்களுக்கு, காதல் ராசி குறைவு. காதலிப்பார்கள், ஆனால் தங்கள் காதலை வெளிப்படுத்த மாட்டார்கள். காதலை கொண்டாட மாட்டார்கள். அதனாலேயே இவர்களுக்கு நல்ல காதல் வாய்ப்புகள் தவறிப் போய்விடும். யாராவது இவர்களை காதலிப்பதாக சொன்னால் அதற்கு இவர் யோசிப்போம் என்று சொல்வதற்கே பல ஆண்டுகள் ஆகும். இவர் காதல் வெற்றி பெற்று திருமணம் செய்துகொண்டால் கணவர் பெரிய பாக்கியசாலிதான். காதல் கணவருக்காக தன் உடல், பொருள், ஆவி என அத்தனையையும் தியாகம் செய்வர். கணவர் பேச்சுக்குக் கட்டுப்படுபவர். கணவருக்கு கடிவாளம் போடுவார். தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ள மாட்டார். தனக்கு தெரியாமல் தன் கணவர் ஒரு துரும்பை எடுத்துப்போட்டால்கூட பத்து மாசம் பேச மாட்டார். வேறு வழி இல்லாமல் ஒரு கட்டத்தில் கணவர் கம்ப்லீட் சரண்டர் ஆகிவிடுவார்.
மௌனப் புரட்சி
மகர ராசிப் பெண்கள், அதிக `பொசசிவ்னஸ்’ உடையவர்கள். அம்மா, சித்தி, அத்தை என்று எந்தப் பெண்ணிடம் தன் கணவர் பேசினாலும், சந்தேகப்படுவார்கள். சண்டை போடுவார்கள். சண்டை என்றால் வாய்ச் சண்டை அல்ல, மாதக் கணக்கில் பேசாமல் இருப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் பேசிய நாட்களைவிட பேசாத ஆண்டுகளை அதிகம் இருக்கலாம். தன் மனைவி ஏன் பேசாமல் இருக்கிறாள் என்பதை கணவர் தெரிந்து கொள்ளவே நீண்ட காலமாகும்.
குறைவான காதல்
மகர ராசி பெண்கள் வாழ்க்கையில் ஊடல், கூடல், காதல், மோதல், செல்லச் சிணுங்கல் போன்ற விஷயங்கள் மிகவும் குறைவு. இவருடைய காதலர் யோகத்தில் இவருக்கு நடந்தால் தவிர இவருடைய மனதில் இருக்கும் காதல் உணர்வுகளை இவர் பெரும்பாலும் வெளிப்படுத்துவதில்லை.
அதிகாரியம்மா
மகரராசிப் பெண், குரலை உயர்த்திப் பேசமாட்டார். கை ஓங்கி அடிக்க மாட்டார். ஆனால், இவர் அதிகாரம்தான் குடும்பத்தில் கொடி கட்டிப் பறக்கும். மொத்தக் குடும்பத்தையும் அரவணைத்துச் செல்வார். பெரிய கூட்டுக் குடும்பங்களுக்குத் தலைவியாக இருந்து, மச்சான், கொழுந்தன், பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைப்பார். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் இவரை ஆகா ஓகோ என்று புகழ்வார்கள். பதினாறு பதினேழு ஆண்டுகள் கூட்டுக் குடும்பமாக இருந்துவிட்டு பின்பு வயதான காலத்தில் கணவரோடு இருக்கும்போது, 16 ஆண்டு சிறை வாழ்க்கை வாழ்ந்தேன் என்று சொல்லிப் புலம்புவார். அதுவரை தன் மனைவியை தியாகத் திருவுருவமாக நினைத்து இருந்த கணவர், அவள் மனதுக்குள் இவ்வளவு ஏக்கமும் புலம்பலும் இருந்ததா என்பதை அறிந்து மனமுடைந்து போய்விடுவார்.மகரராசிப் பெண்ணின் கடைசி காலங்கள் பெரும்பாலும் ஏக்கமும் இரங்கலும் நிறைந்த புலம்பலாக இருக்கக்கூடும். இவர் தனிக் குடித்தனம் போகலாம் என்று திருமணம் முடித்தவுடனேயே இவர் சொல்லி இருந்தால், கணவர் தனியாக அழைத்துச் சென்றிருப்பார். ஆனால் அப்படி கூறினால் எங்கே தன் கணவர் தன் மீது காட்டும் அன்பைக் குறைத்து விடுவாரோ என்று நினைத்து பயந்து அதைச் சொல்லாமலே இருந்து 70 வயதில் சொல்லிப் புலம்புவார்.
நோ பிரேக் அப்
பெரும்பாலும் மகரராசிப் பெண்களின் வாழ்க்கையில், பிரேக்கப் என்பது இருக்காது. இன்பமோ துன்பமோ இவர் அட்ஜஸ்ட் செய்து போய்விடுவார். விவாகரத்து வரை போகமாட்டார். மேஷ ராசி, சிம்ம ராசி கணவர்கள் வாய்த்தால் அவர்கள் பிரிந்து செல்ல வாய்ப்புண்டு. மகர ராசி பெண் தனித்து வாழப் பயப்படுவார். இணைந்து இணங்கிப் போக விரும்புவார். ஆனால் இவர்களின் மௌனமும் மரண அமைதியும் மற்றவர்களுக்கு வெறுப்பூட்டும்.
பொறுப்புணர்ச்சியின் திலகம்
வேலை செய்யும் இடங்களில் மகர ராசி பெண்கள் அடுத்தவரது வேலையையும் சேர்த்து செய்ய தயங்க மாட்டார்கள். லீவ் எடுப்பது, வேலை நேரத்தில் அரட்டை அடிப்பது, பெர்மிஷன் போட்டு சீக்கிரம் கிளம்புவது, அல்லது காலையில் லேட் ஆக வருவது போன்ற விஷயங்கள் இவர்களுக்கு பிடிப்பதில்லை. அலுவலகத்துக்குச் சரியான நேரத்தில் வந்து கூடுதலாக பத்து நிமிடம் வேலை பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள். அவரவர் வேலைகளை அவரவர் செய்து முடிக்க வேண்டும்
என்பது இவர்களின் கருத்து. ஆனால், ஆபீசை விட்டுக் கிளம்பும்போது அங்கு எரியும் லைட், அங்கு சுற்றும் ஃபேன் ஆகியவற்றை இவரே கவனமாக ஒவ்வொரு அறையிலும் பார்த்து ஆஃப் செய்து
விட்டுப் போவார். பொறுப்புணர்ச்சியின் திலகம் என்றே இவரைச் சொல்லலாம்.
பிள்ளைப் பாசம்
மகரராசிப் பெண்கள், தன் பிள்ளைகளை தரமாக வளர்ப்பார்கள். இரவும் பகலும் பிள்ளைகளோடு இருந்து அவர்களைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள். இவர்கள் கணவரோடு உறங்குவதைவிட பிள்ளைகளோடு உறங்கும் இரவுகள்தான் அதிகம். கணவரின் தேவைகளைகுறைவின்றி கவனித்துக் கொள்வர். ஆனால், பெரும்பான்மையான நேரங்களில் தன் பிள்ளைகளுடன் இருக்கவே விரும்புவர். பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் நகர்வையும் கண்காணிப்பார்கள். கூடுமானவரை இவரோ அல்லது இவரது கணவரோ பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு வரும்போது அழைத்துக் கொண்டு வர வேண்டும், பிள்ளைகளை தனியாக விடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.பிள்ளைகளுக்கான உணவைச் சமைப்பதிலும் பரிமாறுவதிலும் பள்ளிக் கூடத்துக்கு லஞ்ச் கட்டிக் கொடுப்பதிலும் இவர்களே தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். சமையல்காரர் அல்லது வேலைக்காரரிடம் கணவர் மற்றும் பிள்ளைகளின் பொறுப்பை ஒப்படைக்க மாட்டார்கள். கணவனுக்கு வேண்டிய பணிவிடை களையும் பிள்ளைகளுக்கு வேண்டியவற்றையும் தானே முன்நின்று செய்வர். தன் மாமனார் மாமியாருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் இவரே முன் நின்று செய்து முடிப்பார்.
நேர்மையான வெற்றி
தொடக்கத்திலிருந்து பிள்ளைகளுக்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்து நிறைய யோசித்து, கணவரோடு அது பற்றி விவாதித்து அவர்களுக்கு எவ்வித சஞ்சலமும் குழப்பமும் தடுமாற்றமும் இல்லாமல் ஒரே நேர்பாதையில் அவர்களை அழைத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டுவார். மகரராசிப் பெண்ணுக்கு இலக்கு மட்டுமல்ல இயக்கமும் நேர்மையாக இருக்க வேண்டும். செல்லும் இடம் சரியான இடம் என்பதோடு நின்றுவிடாது செல்லும் வழியும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதனால் பிள்ளைகள் அநியாயமான அக்கிரமமான செயல்கள் செய்வதை அனுமதிக்க மாட்டார். தன் கணவரும் அவ்வாறு செய்வதை அனுமதிக்க மாட்டார். நூற்றுக்கு 70 சதவீத மகர ராசிப் பெண்கள் தவறு செய்ய அஞ்சுவர். அதனால் தன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் நேர்மையாளராக வைத்துக்கொள்ள விரும்புவார்கள் இவர்களின் நேர்மையே இவர்களுக்கு மறுமை இன்பத்தை
அளிக்கும்.
முனைவர் செ.ராஜேஸ்வரி
The post மகர ராசி பெண் நேர்மையான வெற்றி appeared first on Dinakaran.