மகம்

3 hours ago 1

நட்சத்திரங்கள்;
பலன்கள்;
பரிகாரங்கள்…

கால புருஷனுக்கு பத்தாவதாக வரக்கூடிய நட்சத்திரம் மகம் நட்சத்திரமாகும். மகம் என்பதை சாதாரண நட்சத்திரமாக சொல்ல முடியாது. அதீத சக்தியுடைய நட்சத்திரம். இந்த நட்சத்திரம் சிம்ம ராசியில் அமைந்திருப்பது ஆட்சியை அதிகாரத்தை குறிப்பதாகும். ஜோதிடத்தில் ‘மகம் ஜகம் ஆளும்’ எனும் பழமொழி உண்டு. மாசி மாதம் வரக்கூடிய மக நட்சத்திரத்தில்தான் எமதர்மன் மீண்டும் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
மகம் – விருட்சம் : ஆலமரம்
மகம் – யோனி : ஆண் எலி
மகம் – பட்சி : ஆண் கழுகு
மகம் – மலர் : மல்லிகை
மகம் – சின்னம் : வீடு,
சிம்மாசனம்
(அ) பல்லக்கு,
நுகம்
மகம் – அதிபதி : கேது
மகம் – அதி தேவதை: சூரியன், கேது,
பித்ருக்கள்
மகம் – கணம் : ராட்ஷச கணம்

மகம் நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் முற்சனி, வாய்க்கால், வேட்டுவன், எழிலி, ஞமலி, மாசி, கொடுநுகம் ஆகியன…வேட்டுவன் என்பது வேடனைக் குறிக்கும் சொல்லாகும். எழிலி என்பது மேகத்தை அழகையும் குறிப்பதாகும். ஞமலி என்பது நாயையும், மயிலையும் குறிப்பதாகும். ெகாடுநுகம் என்பது கலப்பை என்று பொருள். கால புருஷனுக்கு ஐந்தாம் பாவகம் என்று சொல்லக்கூடிய இடம் இந்த சிம்மம். இதுவே பூர்வ புண்ணியஸ்தானம் இதில் உள்ள மகம் மிகவும் சிறப்பான நட்சத்திரமாகும்.மகம் என்பது கேதுவின் நட்சத்திரமாக இருந்தாலும் சிம்மத்தில் அமரக்கூடிய இந்த நட்சத்திரமானது சாணக்கியத் தன்மையை ஏற்படுத்தும். சிம்மம் என்பது சிம்மாசனத்தை குறிப்பதாகும். ஆகவே, தனது சாணக்கியத்தனத்தால் சிம்மாசனத்தை பெறும் திறமையுடையவர்கள்.மக நட்சத்திரத்திற்கென தனிச்சிறப்புகள் உண்டு. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சீதா தேவி, அர்ச்சுனன், எமன் ஆகியோர். இவர்கள் மூவரும் தர்மத்தை விட்டு விலகாமல் வாழ்ந்தவர்கள். அது போலவே தர்மமாகவே நடக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு மிகுந்திருக்கும். சூழ்நிலைக் காரணமாக தவறுகளை செய்து பின் வருத்தப்படுவார்கள்.

பாவங்களை கரைக்கும் மகம்…

மாசி மகம் என்பது ஒரு சிறப்பான நாள் அன்று நீர் நிலைகளில் நீராடுவதால் நம் கர்ம வினைகள் களைந்து போகும் என்ற நம்பிக்கை உண்டு. அதன்படியே, அன்று நீர் நிலைகளில் நீராடி கோயில் தரிசனம் செய்வர்.
இது போலவே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று மகாமகம் வருகிறது. அச்சமயத்தில் கும்பகோணத்தில் உள்ள மகா மக குளத்தில் நீராடுவார்கள். அப்பொழுது அங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு நதிகளில் வருவதாகவோ அல்லது அதில் நீராடிய புண்ணியம் கிடைக்குமென்று ஐதீகம். அனைத்து புண்ணியத் தீர்த்தங்களும் இங்கு வந்து சங்கமம் ஆகும் என பெரியோர்கள் நம்புகின்றனர். புராணங்களும் சொல்கின்றன.

அதுமட்டுமின்றி ஏழு தலைமுறைகளாக முன்னோர்கள் செய்த பாவங்களும் உங்களின் பாவங்களும் கரையும் என்று புராணங்கள் வலியுறுத்துகின்றன. மகம் நட்சத்திரம் பித்ருக்களின் சாபத்தையும் பித்ருக்களின் பாவத்தையும் கரைக்கிறது என சொல்கிறது புராணங்கள்.இப்பூவுலகில் எமதர்மன் உயிர்களை எடுத்து துன்புறுத்திக் கொண்டிருக்கவே சிவபெருமானிடம் முறையிடவே சிவபெருமான் எமனை சம்ஹாரம் செய்தார். உலகில் அனைத்து உயிர்கள் அழிவது நின்று போகவே பூமியின் பாரம் அதிகமாகவே பூமாதேவி பார்வதியிடம் முறையிடலானாள். அதன் காரணமாக மக நட்சத்திரத்தின் ஒரு நாளன்று எமன் மீண்டும் உயிர் பெற்று தனது தர்மத்தை செய்ய சிவபெருமானின் அருளால் பிறப்பெடுத்தான். அதுவே, மகாமகமாக உள்ளது.

பொதுப்பலன்கள்

மகத்தில் பிறந்தவர்கள் எதையும் ஆழ்ந்து சிந்திக்கும் திறன்படைத்தவர்கள். ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டால் அதை அடையும் வரை பிடிவாதமாக இருப்பர். நிர்வாகம் மற்றும் ஆதிக்க குணம் கொண்டவர்களாக இருப்பர். ஆனால், மெல்லிய மனம் கொண்டவர்கள். குழப்பங்கள் இவர்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கும். ஆகவே, சிறந்த ஆலோசகர்கள் இவர்களுக்கு தேவை. முடிவெடுத்துவிட்டால் எக்காரணம் கொண்டும் பின்பு வாங்க மாட்டார்கள்.

நிறைந்த ஞானம் உடையவர்கள்.

குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பர். குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் துடித்துப் போவர்.

தொழில்

எந்த தொழில் செய்தாலும் விநாயகரை வணங்கி செய்தல் இவர்களுக்கு நலம் பயக்கும். கேது அதிதேவதை இவரே. தொழிலில் உள்ள பிரச்னைகள் நல்ல முறையில் தீர்வு ஏற்படும்.

ஆரோக்கியம்

இந்த நட்சத்திரக்கார்கள் உணவில் அதிக கவனம் தேவை. அதீத உணவு எடுத்து கொழுப்பு தொடர்பான பிரச்னைகளையும் அவசரத்தில் கெட்டுப்போன பதார்த்தங்களை சாப்பிட்டு சிரமங்களுக்கு உட்படும் சூழ்நிலை ஏற்படலாம். குடிநீரை சுத்தமாக அருந்த வேண்டும். இவர்கள் ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறை கொள்ளாமல் பின்பு வருத்தப்படுவர். ஆகவே, ஆரோக்கிய கவனம் தேவை.

மகத்திற்கான வேதை நட்சத்திரம்

வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். இதற்கு வேதை தரும் நட்சத்திரம் ரேவதி. ரேவதி நட்சத்திர நாளில் புதுக் காரியங்களை தொடங்குவது மற்றும் பிரச்னைகள் தொடர்பான விஷயங்களில் பேச்சுவார்த்தை நடந்துவதும் வேதையை ஏற்படுத்தும்.

பரிகாரம்

மகம் நட்சத்திரம் வரும் நாளில் பிள்ளையார்பட்டி சென்று விநாயகரை அபிஷேக அர்ச்சனை செய்து வழிபடுதல் சிறப்பான நற்பலன்களைத் தரும். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமை வரும் மகம் நட்சத்திரம் சிறப்பான நற்பலன்களைத் தரும்.

The post மகம் appeared first on Dinakaran.

Read Entire Article