மகப்பேறு to புது அம்மா கேள்வியும் பதிலும்!

1 week ago 4

நன்றி குங்குமம் டாக்டர்

பத்துப் பிள்ளைகளை சாதாரணமாகப் பெற்றெடுத்த காலம் போய், இன்றைக்கு இரு குழந்தைகளை பெற்றெடுக்கவே நமக்கு ஏற்படும் பயம், உடலில் நடக்கும் பிரச்னைகள், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் சொல்லும் மூடநம்பிக்கை என இந்தத் தொழில்நுட்ப உலகில் பிரச்னைகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.அதிலும் குறிப்பாக, கர்ப்ப காலம், குழந்தை பிறப்பு, அதன் பின்னான காலம் என இந்த மூன்று முக்கியக் கட்டத்திலும் இன்றைய நவீனப் பெண்களுக்கு பல்வேறு சிக்கல்களும், சந்தேகங்களும் இருக்கின்றன. அவற்றில் பொதுவாக பெண்கள் பலர் என்னிடம் கேட்கும் கேள்விகளையும், அதற்கு சொன்ன பதில்களையும், மற்றவர்களுக்கும் பயன்படும் என்பதற்காக சென்ற இதழில் இடம்பெற்றது போலவே அதே கேள்வி-பதில் வடிவில் இங்கே அளிக்கிறேன்.

1.கர்ப்பமாக இருக்கும் போது உடற்பயிற்சிகள் செய்தால் சுகப்பிரசவம் நிச்சயம் ஆகுமா?

சுகப்பிரசவம் நடக்க குழந்தையின் எடை, குழந்தையின் தலை திரும்பி இருப்பது, தாயின் ரத்த அழுத்தம் போன்ற பல விஷயங்கள் கணக்கில் கொள்ளப்படும். உடற்பயிற்சிகள் சுகப்பிரசவத்திற்கு உறுதுணையாக இருக்கும். ஆனால், இதனை செய்வதால் நிச்சயம் சுகப்பிரசவம் ஆகும் என்பது இல்லை.

2.சுகப்பிரசவத்தில் வலி வந்தபின் இயன்முறை மருத்துவப் பங்கு என்ன?

சுகப்பிரசவம் நடக்கும்போது நமக்கு அதீத ஆற்றல் செலவாகும். நாம் மூச்சு விடுவதை ஒழுங்குப்படுத்தி சீராகவும், வலிக்கு ஏற்ப மூச்சு இழுத்துவிடும் முறைகளை மாற்றும்போது எளிதாய் குழந்தையை வெளியே தள்ள முடியும். மேலும், வலி வந்த பின் கர்ப்பப்பை வாய் முற்றிலும் திறக்க உடற்பயிற்சிகள் உதவி செய்யும். எனவே, ஒரு சுகப்பிரசவம் சுகமாய் நிகழ இயன்முறை மருத்துவர் உதவி மிகவும் தேவை.

3. அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்த பெண்கள் உடற்பயிற்சிகள் செய்தால் அடி இறங்கிவிடும் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்கிறார்களே, இது உண்மைதானா?

அதிக எடை தூக்கி, அதிக அழுத்தம் கொடுத்து செய்வதால் இப்படி ஆகலாம். ஆனால், முறையாக இயன்முறை மருத்துவரை அணுகி, அவரிடம் உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் படிப்படியாகத்தான் எளிதில் இருந்து கடினமான உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுப்பர் என்பதால், பயம் தேவையில்லை.

4.சுகப்பிரசவமாகி ஒரு வருடம் ஆகியிருக்கிறது. ஆனால், ஏன் எனக்கு முதுகு வலி வருகிறது?

சுகப்பிரசவம் ஆன பெண்களுக்கு முதுகு வலி வராதென்று என் வீட்டில் சொன்னார்களே?எந்த வகையான பிரசவமானாலும் பத்து மாதம் குழந்தையை சுமப்பதும், உடலில் அந்த நேரத்தில் ஏற்படும் ஹார்மோன்கள் மாறுதல்களும் எல்லாப் பெண்களுக்கும் நிகழ்வதே. அதனால் முதுகு எலும்புகள், தசைகள் பலவீனமாகி வலி ஏற்படும். எனவே, இந்தக் கேள்வியில் மூடநம்பிக்கைதான் உள்ளது.

5.வெளிநாட்டு கர்ப்பிணி பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் உடற்பயிற்சி செய்வது போல வீடியோ ஒன்றை பார்த்தேன். அப்படி செய்யலாமா?

தண்ணீரில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்ல தேர்வு. தரையை விட தண்ணீரில் அதிகப் பலன் உண்டு. வெளிநாடுகளில் இந்த வகை பயிற்சிகள் பல வருடங்களாக உள்ளது. நம்மூரில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது. வாய்ப்பு இருக்கும் கர்ப்பிணிகள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

6.குழந்தை பிறந்த பின் ஏன் வயிறு கொலகொலவென இருக்கிறது? இது எப்படி சரியாகும்?

குழந்தை வளர வளர கருப்பை விரியும். இதனால் வயிற்றில் உள்ள தசைகளும், தோளும் விரியும். குழந்தை பிறந்த பின் உடனடியாக அந்த இடம் எதுவும் இல்லாமல் சுருங்குவதால் தசைகள் அப்படியே சுருங்காமல் இருக்கும். இயற்கையின் படைப்பில் தசைகள் ஓர் எலாஸ்டிக் ரப்பர் பேண்ட் மாதிரி சில மாதங்கள் கழித்துத் தானாக சுருங்கிவிடும். அதாவது, ரப்பர் பேண்டை இழுத்துவிட்டால் கொஞ்ச நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் அல்லவா, அதேபோல. மேலும், கச்சிதமாக முன்பு மாதிரி தசைகள் இருக்க உடற்பயிற்சி செய்து மெருகேற்றிக் கொள்ளலாம்.

7.எனக்கு அறுவை சிகிச்சை நடந்ததனால் முதல் ஒரு வருடம் ஓய்வெடுக்கச் சொல்கிறார்களே… இப்படி நிச்சயம் ஓய்வெடுக்க வேண்டுமா?

நிச்சயம் தேவையில்லை. இப்படி செய்வதால் நீங்கள் மேலும் பலவீனம் ஆவீர்கள். அறுவை சிகிச்சை செய்தால் முதல் ஆறு மாதம் அதிக எடை தூக்கக் கூடாது. அதேபோல, முதல் மூன்று மாதம் அதிக முறை கீழே அமர்ந்து எழக்கூடாது. அவ்வளவுதான். மிதமாக எல்லாவற்றையும் செய்யலாம். ஆறு மாதத்திற்கு மேல் எப்போதும் போல இயங்கலாம்.

8.எனக்கு ட்ரெக்கிங், பாடி பில்டிங் செய்ய வேண்டும் என ஆசை. ஆனால், அறுவை சிகிச்சை ஆனதற்குப் பிறகு, இதையெல்லாம் எப்போதும் செய்ய முடியாது என்று
சொல்கிறார்களே… அப்போ, என் ஆசைகளை நான் மறந்துவிட வேண்டுமா?

நிச்சயம் இல்லை. நம் தமிழ்நாட்டிலேயே அறுவை சிகிச்சைக்குப் பின் பாடி பில்டிங்கில் கலக்கும் இரு பெண்கள் உண்டு. அறுவை சிகிச்சைக்குப் பின் பெரிய மலைகளில் ஏறும் பெண்களும் உண்டு. பயம் இல்லாமல் முறையான உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்து வந்தால் எவரெஸ்டும் எள் அளவுதான்.

9.குழந்தை பிறந்ததுக்குப் பிறகு வரும் தொப்பையை குறைக்க முடியுமா? மீண்டும் பழைய ஜீரோ சைஸ் உடல்வாகினை எவ்வாறு கொண்டு வரலாம்?

கர்ப்பப்பை சுருங்க முதல் ஆறு வாரம் ஆகும். ஆனால், சிலருக்கு கர்ப்பப்பை முற்றிலும் சுருங்காமல் இருக்கலாம். இதனால், கொஞ்சம் தொப்பை இருக்கலாம். மற்றபடி வயிற்றில்
உள்ள கொழுப்பை கரைப்பது நம்மிடமே உள்ளது.

தொகுப்பு: மா.வினோத்குமார்

 

The post மகப்பேறு to புது அம்மா கேள்வியும் பதிலும்! appeared first on Dinakaran.

Read Entire Article