ம.பி.: ஆலையில் ரூ.1,814 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்; குஜராத் மந்திரி பாராட்டு

1 month ago 8

காந்திநகர்,

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் செயல்பட்டு வந்த தொழிற்சாலை ஒன்றில் இருந்து போதை பொருட்கள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்கள் என ரூ.1,814 கோடி மதிப்பிலான பொருட்களை குஜராத் மாநில பயங்கரவாத ஒழிப்பு படை முடக்கி உள்ளது. கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நடந்த இந்த சோதனையை, டெல்லியை சேர்ந்த போதை பொருள் தடுப்பு கழகத்தின் அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் அமித் சதுர்வேதி மற்றும் சன்யால் பானே ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அமித் போபால் நகரை சேர்ந்தவர். சன்யால், மராட்டிய மாநிலம் நாசிக் நகரை சேர்ந்தவர் ஆவார். சோதனையில், திட மற்றும் திரவ வடிவிலான 907 கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.1,814 கோடி என கூறப்படுகிறது. இது மிகப்பெரிய தொழிற்சாலையாக செயல்பட்டு வந்துள்ளது. இதனை நாங்கள் கண்டறிந்து உள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கைக்கு குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

நம்முடைய போலீசாரின் அர்ப்பணிப்பு உண்மையில் பாராட்டத்தக்கது. இந்தியாவை ஒரு பாதுகாப்பான மற்றும் சுகாதார நாடாக உருவாக்கும் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Read Entire Article