போலீஸ்காரர்கள் போல் நடித்து துணிகரம்: நகைக்கடை ஊழியரிடம் ₹25.57 லட்சம் அபேஸ்; இளம்பெண் உள்பட 4 பேர் கைது

4 weeks ago 5

திருமலை: போலீஸ் போல் நடித்து நகைக்கடை ஊழியரிடம் ரூ.25.57 லட்சத்தை கொள்ளையடித்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், விஜயவாடா, சீதாராமபுரத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (33). இவர் ஜக்கையப்பேட்டையில் உறவினரின் ஆன்லைன் முன்பதிவு கவுன்டரில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் உள்ள நகை கடையில் எழுத்தராக வேலை செய்பவர் ராமகிருஷ்ணா (35). இவர் வெளி மாநிலங்களுக்கு தங்கம் வாங்க செல்லும்போது பார்த்தசாரதியின் கடையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வார். அவ்வாறு முன்பதிவு செய்யும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 11ம்தேதி விஜயவாடாவில் இருந்து சென்னை செல்ல சர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராமகிருஷ்ணா ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். இவர் தங்கம் வாங்க செல்வதை அறிந்த பார்த்தசாரதி, பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார். இதற்காக பார்த்தசாரதி தனது தோழியான சாந்திக்கு (30) தகவல் தெரிவித்தார். அதன்படி சாந்தி தனது கூட்டாளிகளான சுபானிகான் (35), கிருஷ்ணராஜு (40), ஷேக்ஹசாருதீன் (39) சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 11ம்தேதி ராமகிருஷ்ணா விஜயவாடா கவர்னர்பேட்டையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் ₹25.57 லட்சம் வாங்கிக்கொண்டு மீண்டும் ஜக்கையப்பேட்டைக்கு ரயிலில் செல்ல புறப்பட்டார். ஆனால் ரயில் சென்றுவிட்டதால் மங்களகிரி ரயில் நிலையத்திற்கு வாடகை காரில் சென்றார். இதை ரகசியமாக கண்காணித்த பார்த்தசாரதி, சுபானிகான், வம்சி கிருஷ்ணராஜுவிடம் போனில் கூறினார். இதையடுத்து தாங்கள் திட்டமிட்டபடி சுபானிகானும், வம்சிகிருஷ்ணராஜுவும் போலீஸ்காரர்கள் போல் உடைந்து அணிந்து கொண்டு மற்றொரு காரில் பின்தொடர்ந்தனர்.

வழியில் ராமகிருஷ்ணாவை தடுத்து நிறுத்தி, நீங்கள் ஆவணங்கள் இன்றி நகை, பணத்தை எடுத்து செல்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உங்களிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறி, தங்களது காரில் ஏற்றிக்கொண்டு பிரபாஸ் கல்லூரி அருகே அழைத்து வந்தனர். பின்னர் காரிலேயே இருக்கும்படியும், இன்ஸ்பெக்டர் வந்து விசாரிப்பார் என்றும் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டரை அழைத்து வருமாறு சுபானிகானை அனுப்பிவிட்டு வம்சி கிருஷ்ணராஜு ராமகிருஷ்ணாவுடன் இருந்தார்.

சிறிது நேரத்தில் சுபானிகான், இன்ஸ்பெக்டர் போல் வந்த ஷேக்ஹசாருதீன் ஆகியோருடன் வம்சி கிருஷ்ணராஜுவும் சேர்ந்து ராமகிருஷ்ணாவிடம் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த பையில் ₹25.57 லட்சம் இருந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சுபானிகான், வம்சிகிருஷ்ணராஜு, ஷேக்ஹசாருதீன் ஆகியோர் பணத்தை பறித்து செல்வது தெரிய வந்தது. இதையடுத்து சுபானிகான், ஷேக்ஹசாருதீன் ஆகியோரை நேற்று முன்தினமும் பார்த்தசாரதி மற்றும் சாந்தி ஆகியோரை நேற்றும் கைது செய்தனர். சாந்தி வீட்டில் இருந்த ₹25.27 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வம்சிகிருஷ்ண ராஜுவை தேடி வருகின்றனர்.

The post போலீஸ்காரர்கள் போல் நடித்து துணிகரம்: நகைக்கடை ஊழியரிடம் ₹25.57 லட்சம் அபேஸ்; இளம்பெண் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article