போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

10 hours ago 2

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டிற்கு ஆறுதல் கூற நேற்று அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி, எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் சென்றிருந்தனர். அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீன்குமாருக்கு அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆறுதல் கூறினார். அப்போது, தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.

அப்போது அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீன் குமாரிடம் பேசினார். இருவருக்கும் ஆறுதல் கூறிய முதல்வர், தாய் மாலதியிடம், ‘‘அம்மா வணக்கம்மா… ஸாரிம்மா… நடக்கக்கூடாதது நடந்து விட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆக்‌ஷன் எடுத்திருக்கோம். நீங்க தைரியமாக இருங்க… உங்களுக்கு வேணுங்கிறதை செய்து தருகிறோம். அமைச்சர் பெரியகருப்பன் பார்த்துப்பாரு… தைரியமா இருங்க’’ என்றார்.

நவீன்குமாரிடம் பேசும்போது, ‘‘தம்பி ஸாரி தம்பி… சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் கைது பண்ணியாச்சு… ஆக்‌ஷன் எடுத்திருக்கோம். தைரியமா இருங்க’’ என்றார். அப்போது நவீன்குமார், ‘‘எங்க அப்பா சின்ன வயசுலேயே இறந்துட்டாரு… அண்ணன் கஷ்டப்பட்டு வளர்த்த புள்ளை சார்…. விசாரணைன்னு கூட்டு போய் இப்படி பண்ணிட்டாங்க சார்…’’ என்றார். உடனே முதல்வர், ‘‘யாருமே இதை ஏற்க முடியாது. ஒத்துக்க முடியாது. அவங்களுக்கு என்ன தண்டனை வாங்கிக் கொடுக்க முடியுமோ, வாங்கிக் கொடுத்துருவோம். தைரியமா இருங்க…’’ என்றார்.

* வாலிபரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்

மடப்புரம் கோயில் ஊழியர் அஜித்குமாரை, மானாமதுரை தனிப்படை போலீசார் கட்டி வைத்து மாறி, மாறி தாக்கும் காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், கோயில் ஜன்னல் வழியாக செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார். இதில், அஜித்குமார் தரையில் அமர வைக்கப்பட்டுள்ளார். அவரை போலீசார் மாறி, மாறி கம்பால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

* கைதான காவலர்களின் குடும்பத்தினர் முற்றுகை

5 போலீசாரின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் திருப்புவனம் போலீஸ் நிலையத்தின் முன்பாக தரையில் அமர்ந்து முற்றுகையிட்டனர். ‘கடமையை செய்தவர்களுக்கு இதுதான் தண்டனையா? எங்களுக்கும் குழந்தைகளுக்கும் வழி சொல்லுங்கள்’ என அழுதபடி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

The post போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் appeared first on Dinakaran.

Read Entire Article