போலீசை கல்லால் அடித்துக் ெகான்ற கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு : அரிவாளால் வெட்டியதில் போலீஸ் படுகாயம்

3 days ago 5

தேனி: உசிலம்பட்டி போலீஸ் முத்துக்குமாரை கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி, கம்பம் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். அரிவாளால் வெட்டியதில் போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். உசிலம்பட்டி இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக இருந்தார். கடந்த 27ம் தேதி இரவு, உசிலம்பட்டியில் உள்ள பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த, தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் (29), அவரது நண்பர்கள் பிரபாகரன், பாஸ்கரன், சிவனேஸ்வரன் ஆகியோரும் அங்கு மது அருந்தியுள்ளனர். இவர்களைப் பார்த்த காவலர் முத்துக்குமார், பொன்வண்ணனிடம், ‘இனிமேல் கஞ்சா விற்பனையில் ஈடுபடாதே’ என அறிவுரை கூறியுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்கள், முத்துக்குமாரை கல்லால் அடித்து கொலை செய்தனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் உசிலம்பட்டியில் இருந்து, 2 டூவீலர்களில் தப்பி மல்லபுரம் வழியாக தேனி மாவட்டம், வருசநாடு மலைப்பகுதிக்கு சென்றள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் அவர்கள் தப்பிய இடத்தை போலீசார் கண்டறிந்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டே, தேனி எஸ்பி சிவபிரசாத், மதுரை எஸ்பி அரவிந்த், சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ராவத், ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் ஆகியோரைக் கொண்ட தனிப்படையினர் வருசநாடு மலைப்பகுதிகளில் கடந்த 27ம் தேதி இரவு முதல் முகாமிட்டு தேடி வந்தனர். அனைத்து சோதனை சாவடிகளையும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கேரளாவுக்கு தப்ப முயற்சி : போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்கும் வகையில் 4 பேரும், வருசநாடு மலைப்பகுதியில் இருந்து காமாட்சிபுரம் வழியாக மலைப்பகுதியிலேயே கேரளாவுக்கு தப்பி செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தகவல் கிடைத்து உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான தனிப்படையினர் கம்பம்மெட்டு அடிவாரத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள தனியார் தரிசு நிலக்காட்டில், பொன்வண்ணன் உட்பட 4 பேரும் பதுங்கி இருப்பதை கண்டதும் சுற்றி வளைத்தனர். அப்போது, பொன்வண்ணன் தனிப்படையில் இருந்த காவலர் சுந்தரபாண்டியனை அறிவாளால் தாக்கினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் ஆனந்த், கைத்துப்பாக்கியால் பொன்வண்ணனை 3 முறை சுட்டார். இதில் அவருக்கு மார்பிலும், தோள்பட்டையிலும் குண்டுகள் பாய்ந்தன. இதையடுத்து தப்பியோட முயன்ற மற்ற மூவரும் போலீஸ் பிடியில் சிக்கினர். துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த பொன்வண்ணனை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நண்பர்களான சிவனேஸ்வரன், பிரபாகரன், பாஸ்கரன் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரர் சுந்தரபாண்டியனை, திண்டுக்கல் சரக போலீஸ் டிஐஜி வந்திதா பாண்டே மற்றும் தேனி எஸ்பி சிவப்பிரசாத் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும், ஏற்கனவே கொலை முயற்சி மற்றும் மோசடி ஆகிய வழக்குகள் உள்ளது. தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட வாகனங்களில், சுமார் 75க்கும் மேற்பட்ட போலீசார் சுமார் 36 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் நேற்று பகல் 1 மணியளவில் குற்றவாளியை சுட்டுப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

21 குண்டுகள் முழங்க தகனம்: இதன்டையே கொலை செய்யப்பட்ட காவலர் முத்துக்குமாரின் உடல் சொந்த ஊரான கள்ளப்பட்டி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையில் அரசு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க காவலரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பொன்வண்ணன் மீது ெகாலை, போக்சோ வழக்கு
துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிபட்டுள்ள பொன்வண்ணன் மீது கடந்த 2022ம் ஆண்டு சிறுமியை காதலித்து திருமணம் செய்த வழக்கில் பழனிசெட்டிபட்டி போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இத்திருமணம் சம்பந்தமாக சிறுமியின் உறவினர் ஒருவரை பொன்வண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தங்க நாணய மோசடி
கைதான சிவனேஸ்வரன் மீது வக்கீல் ஒருவரை கடத்தியது சம்பந்தமாகவும், அவரது நண்பர் ஒருவரின் தந்தையை கொலை செய்தது சம்பந்தமாகவும் வழக்கு உள்ளது. மேலும், தேனியில் குறைந்த விலைக்கு தங்க நாணயங்களை தருவதாக கூறி முத்துதேவன்பட்டியை சேர்ந்த ஒரு ஆசிரியரிடம் மோசடி செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

அண்ணன், தம்பி
கைதான பிரபாகரன், பாஸ்கரன் ஆகிய இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். தேனி அல்லிநகரம் பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இருவர் மீதும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது சம்பந்தமாக ஒருவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கு உள்ளது.

The post போலீசை கல்லால் அடித்துக் ெகான்ற கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு : அரிவாளால் வெட்டியதில் போலீஸ் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article