போலீசார் பிடிக்க விரட்டியதால் மேம்பாலத்தில் இருந்து குதித்தபோது ரவுடிகளின் கை, கால்கள் முறிந்தது: கொடுங்கையூரில் பரபரப்பு

3 weeks ago 6


பெரம்பூர்: போலீசார் பிடிக்க விரட்டியபோது மேம்பாலத்தில் இருந்து குதித்த ரவுடிகளின் கை, கால்கள் முறிந்தது. சென்னை கொடுங்கையூர் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா கைமாற்றப்படுவதாக இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று காலை கொடுங்கையூர் போலீசார்,முல்லை நகர் மேம்பாலம் அருகே கண்காணித்தபோது பைக்கில் வந்த ஒருவர் மற்றொரு நபரிடன் கஞ்சாவை கைமாற்றினார். அப்போது போலீசார் விரட்டிசென்று அவர்களை பிடிக்க முயன்றபோது இருவரும் தப்பித்து ஓடினர். முல்லை நகர் மேம்பாலத்தில் இருந்து இரண்டு பேரும் குதித்தபோது ஒருவருக்கு கையும் ஒருவருக்கு காலும் உடைந்தது. இதன்பிறகு அவர்கள் இருவரையும் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், வியாசர்பாடி சர்மா நகர் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் என்கின்ற முகேஷ் (22) என்பதும் இவர் மீது 2 கொலை வழக்கு உட்பட 10 வழக்குகள் உள்ளதும் மடிப்பாக்கத்தில் திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கு, செம்பியம் பகுதியில் சந்தோஷ என்பவரை கொலை செய்த வழக்கு ஆகியவற்றில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மற்றொருவர் தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2வது தெருவை சேர்ந்த மோகன் என்கின்ற மோகனசுந்தரம் (31) என்பதும் இவர் மீது 21 குற்றவழக்குகள் இருப்பதும் ஏ கேட்டகிரி சரித்திர பதிவேடு ரவுடி என்பதும் தெரியவந்துள்ளது. இவர் மீது கடந்த 2012ம் ஆண்டு ஆர் கே நகர் பகுதியில் வெங்கடேஷ் என்பவரை கொலை செய்த வழக்கு, மறைமலைநகர் பகுதியில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட கொலை வழக்குகளும் உள்ளது.

மேலும் மோகனசுந்தரம், ஆந்திராவிற்கு சென்று கஞ்சாவை வாங்கிவந்து மொத்தமாக புவனேஸ்வரனிடம் கொடுத்து விற்பனை செய்துள்ளார். இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மோகனசுந்தரம், புவனேஸ்வரன் ஆகியோருக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post போலீசார் பிடிக்க விரட்டியதால் மேம்பாலத்தில் இருந்து குதித்தபோது ரவுடிகளின் கை, கால்கள் முறிந்தது: கொடுங்கையூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article