போலீசாரின் புலன் விசாரணையில் மாற்றம் வேண்டும்

5 hours ago 4

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தந்தை, மகன் மரணத்தின் வடுக்கள் கூட இன்னும் மாறாத நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசார் விசாரணையில் அஜித்குமார் என்ற 28 வயது கோவில் காவலாளி அடித்து கொல்லப்பட்டார். அவர் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். அங்கு சாமி கும்பிட வந்த திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்ற பெண் தன்னுடைய நகை, பணத்தை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக அஜித்குமாரை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதால் உடலில் 44 காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அனைத்து போலீஸ் அதிகாரிகளிடமும் பேசி, எதிர்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க பல அறிவுறுத்தல்களை வழங்கினார்.

காவல் நிலையத்தில் யாரும் புகார் அளிக்க வந்தால், உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவேண்டும் அல்லது சி.எஸ்.ஆர். என்ற ஒப்புகை சீட்டை கொடுக்கவேண்டும். விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது. தேவை இல்லாமல் போலீஸ் காவலில் வைக்கக்கூடாது. ஒருவரை 3, 4 போலீஸ்காரர்கள் ஒன்றாக சேர்ந்து விசாரிக்கக்கூடாது. போலீஸ் காவலில் மரணம் இருக்கவே கூடாது. லத்திகளை பயன்படுத்தக்கூடாது. போலீஸ்காரர்கள் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடக்கூடாது. குற்றவழக்குகள் விசாரணையில் நல்ல முன் அனுபவம் உள்ள திறமைவாய்ந்த போலீஸ்காரர்களைத்தான் பயன்படுத்தவேண்டும் என்பது போன்ற உத்தரவுகளை அடுக்கடுக்காக பிறப்பித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இப்போதுள்ள புலன் விசாரணை மாற்றப்பட்டு அறிவியல் பூர்வமான விசாரணை நடத்த போலீசாருக்கு பயிற்சி அளிக்கவேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, ஒரு பயங்கரவாதியிடம் நடத்திய புலன் விசாரணை இன்றளவும் பேசப்படுகிறது. பயங்கரவாதியிடம் அவர் தினமும் இரவு 8 மணிக்கு சென்று பிரியாணி, டீ எல்லாம் வாங்கிக்கொடுத்து அதிகாலை 5 மணி வரை நட்பு ரீதியாக பேசி, அதற்கு பிறகுதான் தூங்கவிடும் விசாரணையை தொடர்ச்சியாக நடத்தினார். 5 நாட்களுக்கு பிறகு அந்த பயங்கரவாதி தானாகவே வெடிகுண்டுகள் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகில் வைத்திருந்ததை சொல்லிவிட்டான். ஒரு அடி கூட அடிக்காமல் விசாரணை நடத்திய அந்த பாங்கை இதுபோன்ற விசாரணைகளில் போலீஸ்காரர்கள் பின்பற்றவேண்டும். மேலும் அனைத்து போலீஸ்காரர்களின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவர பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.

இதுபோல அத்துமீறல்களோடு சமீபகாலங்களாக நடக்கும் என்கவுண்ட்டர்களையும் போலீசார் தவிர்க்கவேண்டும். அடிக்காமல், உதைக்காமல், என்கவுண்ட்டர் செய்யாமல் புலன் விசாரணை செய்வதில்தான் திறமை இருக்கிறது என்பதை தமிழக காவல் துறையினர் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் காவல் நிலைய மரணங்களுக்காக தமிழ்நாட்டில் ஒரு வழக்கை தவிர மற்ற வழக்குகளில் போலீசார் தண்டிக்கப்படவில்லை என்பதையும் புறந்தள்ளிவிடமுடியாது. ஆக தொடக்கத்தில் பரபரப்பாக பேசப்படும் இதுபோன்ற வழக்குகள் நாளடைவில் நீர்த்துபோய்விடுகிறது. அதுபோன்ற நிலை இனிமேலும் இருக்கக்கூடாது. சாத்தான்குளம், திருப்புவனம் காவல் விசாரணை சம்பவங்களில் கைது செய்யப்பட்ட காவலர்களின் வாழ்க்கையே போய்விட்டது. இனி ஒருபோதும் அவர்கள் காக்கி சட்டை அணியமுடியாது. இதையெல்லாம் அனைத்து காவல்துறையினரும் உணரவேண்டும்.

 

Read Entire Article