போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

3 months ago 15

சென்னை,

சமூக வலைத்தளங்களில் நேற்று வீடியோ காட்சி ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மெரினா இணைப்பு சாலையில் அந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்தது. அந்த வீடியோவில், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவரிடம் காரில் வந்த ஆண்-பெண் ஜோடி தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டி சண்டை போடும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இந்த வீடியோ காட்சியை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். விசாரணையில் போலீஸ்காரரின் பெயர் சிலம்பரசன் என்றும், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வேலைபார்ப்பவர் என்றும், அவர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது குறிப்பிட்ட காரில் வந்த அந்த ஜோடியை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரித்து உள்ளார்.

அப்போதுதான், அந்த மோதல் காட்சி நடந்துள்ளது. அதை வீடியோ எடுத்த சக போலீசார் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸ்காரர் சிலம்பரசன் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் விசாரணையில், சிலம்பரசனிடம் சண்டைபோட்டுவிட்டு தப்பி ஓடிய ஆண்-பெண் ஜோடி யார் என்பது கண்டறியப்பட்டது. அவர்கள் பெயர் சந்திரமோகன் - தனலட்சுமி என்று தெரியவந்தது. சந்திரமோகன் வேளச்சேரியை சேர்ந்தவர். கார் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தனலட்சுமி மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர். போலீஸ் விசாரணையில், சந்திரமோகனின் தோழியாக தனலட்சுமி பழகி வந்துள்ளார். இருவரும் காரில் ஜோடியாக வலம் வந்திருக்கிறார்கள்.

போலீஸ்காரர் விசாரித்ததால் கோபப்பட்டு, ஆபாசமாக திட்டி சண்டை போட்டு உள்ளனர். அவர்கள் இருவரும் துரைப்பாக்கம் பகுதியில் லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்தனர்.

அப்போது, போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து அழைத்து வந்தனர். மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 5 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் சந்திரமோகன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில் மெரினா கடற்கரையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேளச்சேரி சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரை 15 நாட்கள் ( நவ., 6-ம் தேதி வரை) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read Entire Article