சென்னை: போலியான ஆவணம் தயார் செய்து IOB வங்கியில் சமர்ப்பித்து வீட்டு கடன் பெற்று பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் கட்டுமான நிறுவன பங்குதாரர் கைது செய்யப்பட்டுள்ளார். கே.சுகன்யா பெ/வ.35, க/பெ.ஹரிஹரன், வங்கி கிளை மேலாளர், Indian Overseas Bank, Ekkattuthangal Branch, சென்னை-32 என்பவர் கொடுத்த புகார் மனுவில்; கடந்த 2019ம் ஆண்டு மேற்கண்ட வங்கியில் Sonex Builders உரிமையாளர்கள் காட்டாங்குளத்தூர் பகுதியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2 வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததை மறைத்து, கதவு எண்களை மாற்றி, போலியான ஆவணங்கள் தயார் செய்து சிலருடன் கூட்டு சேர்ந்து, வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.60 லட்சம் கடன் பெற்று, கடனை திரும்பி செலுத்தாமல் ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.
அதன் பேரில் கடந்த மாதம் 4ம் தேதி மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வுப்பிரிவில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண். உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையாளர் (மத்திய குற்றப்பிரிவு) A.ராதிகா, வழிகாட்டுதலின்படி, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், Sonex Builders Partner-ஆன எதிரி தேர்விஜயன் ஆ/வ-63 என்பவர் அவரிடம் வீடு வாங்குபவர்களுக்கு போலியான ஆவணங்களை தயார் செய்து கொடுத்து வங்கியில் சமர்பித்து வீட்டு கடன் பெற்று அதை வங்கிக்கு திரும்ப செலுத்தாமல் சுயலாபம் பெறும் நோக்கத்துடன் வங்கி மற்றும் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து சட்டவிரோதமாக ரூ.73,77,416/- பணம் சுயலாபம் அடைந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
அதன் பேரில் Sonex Builders பங்குதாரரான வண்டலூரைச் சேர்ந்த தேர்விஜயன், ஆ/வ 63, என்பவர் நேற்று (08.07.2025) காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேற்படி எதிரி எதிரியை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வுப்பிரிவு, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.
The post போலியான ஆவணம் மூலம் வீட்டு கடன் பெற்று பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி: கட்டுமான நிறுவன பங்குதாரர் கைது appeared first on Dinakaran.