தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வழங்காததால், அவர்களின் ஒரு வாக்குகளை கூட உங்களால் பெற இயலாமல் போகும் எனக்கூறி தூத்துக்குடி சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
என் தந்தையின் அரசியலுக்கு பின்னர் 21 ஆண்டுகள் எந்த அரசியல் கட்சியிலும் என்னை இணைத்து கொள்ளாமல் தனித்து இயங்கி பல்வேறு பொது நல வழக்குகளை தாக்கல் செய்து பல வழக்குகளில் சிறப்பான தீர்வை பெற்றும், நான்கு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளேன். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நான் தவெக கட்சியில் என்னை இணைத்து கொண்டேன். கட்சிக்காகவும் விஜயை இணைய தளத்தில் மிரட்டியவர் மீதும் நீதிமன்றம் மூலம் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தேன்.
இன்னும் சில வழக்குகளையும் நடத்தி வருகிறேன். அரசியலில் பிழைப்போர்க்கு அறமே கூற்றாகும். ஆனால் புறம் பேசியே பொய் முகம் கொண்ட வாய்மையற்றவர்களின் மத்தியில் சிக்கிக் கொண்டதை இப்போது உணருகிறேன். அதனால் மனமும், உடலும் சோர்வடையக்கூடிய வகையில் எனது தவெக அரசியல் பயணம் அமைந்து விட்டது.இதனால் என் எழுத்து பணி, என் சமூகப் பணி, பொதுநல வழக்குகளில் கவனம் செலுத்திட விளைந்துள்ளேன். அரசியல் நயவஞ்சகர்களின் சூதாட்ட களம் என்பதை அறிந்து என் அரசியல் பயணத்தை முடித்து கொள்கிறேன்.
தென் மாவட்டங்களில் மிகப்பெரிய ஒரு சமூகத்தை சார்ந்தவன் மட்டுமல்ல. அந்த சமூகத்திற்கு இந்த இயக்கத்தில் ஒரு மரியாதையை தருவார்கள் என்று இலவு காத்த கிளியாகத்தான் காத்துக் கிடந்தேன். என் விலகளுக்கு பிறகாவது என் சமூகத்தைச் சேர்ந்த ஏதாவது ஒரு தம்பிக்கு அந்த சமூகத்தை கௌரவப்படுத்தும் வகையில் மாவட்டச் செயலாளர் பதவியை வழங்கி இயக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒரு வாக்குகளை கூட தென் மாவட்டங்களில் உங்களால் பெற இயலாமல் போகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பெரிய சமூகத்தை புறக்கணிப்பதா? தவெகவிலிருந்து எழுத்தாளர் விலகல் appeared first on Dinakaran.