நாட்டில் சமீபகாலமாக ஏதாவது ஒரு சமூக வலைதளம் மூலம் விமானங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி வருகிறது. அதிலும் ஒரே நாளில் 30 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதென்றால், ஒன்றிய உள்துறையும், உளவுத்துறையும் மெத்தனமாக செயல்படுவதாகவே கருத வேண்டும். வெடிகுண்டு அச்சுறுத்தல் ெதாடர்ந்து எழுந்து கொண்டிருந்தால், பயணிகளுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் தேவையற்ற பயம் உருவாக வாய்ப்புகள் உண்டு.
கடந்த 17ம் தேதியன்று ஒரேநாளில் 15 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த விமானங்களில் நடந்த சோதனைகளின் முடிவில், அவை வெறும் புரளியே என அறிய முடிந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. சிங்கப்பூர்- மும்பை, மும்பை- பிராங்க்பர்ட் என பல்வேறு விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக கிளப்பி விடப்பட்டது.
உதய்பூரில் இருந்து மும்பைக்கு வந்த விஸ்தாரா விமானத்திலும் வெடிகுண்டு இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. மும்பைக்கு வந்தவுடன் விமானம் சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டபோது, அத்தகவல் பொய் என தெரிய வந்தது. நேற்றும் கூட சிங்கப்பூர்- டெல்லி, சிங்கப்பூர்- புனே, பாலி- டெல்லி உள்ளிட்ட விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானங்களை தரையிறக்கி சோதனையிடப்பட்டபோது, அவை வழக்கம்ேபால் பொய் என கண்டுபிடிக்கப்பட்டது.
சமூக வலைதளங்கள் மூலம் வைரலாகும் இத்தகைய போலி தகவல்களால் பயணிகளின் பாதுகாப்பில் நம்பகத்தன்மை கெடுகிறது. விமானத்தில் வெளிநாட்டுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு நாம் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என வதந்தி பரவும்போது, அவருக்கு பயணம் நிச்சயமாக இனிமையாக இருக்காது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனக்கூறி சோதனைகளை நடத்தும்போது பயணிகளுக்கு அது தொந்தரவாக அமையும்.
இதுதவிர விமானங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை, சோதனைகள் ஆகியவற்றுக்கு மட்டுமே ரூ.3 கோடி செலவாகி வருவதாக விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இத்தொகை பயணிகள் தலையிலே சுமத்தப்பட வாய்ப்புகள் உள்ளது. ஒன்றிய அரசும், உள்துறையும் இத்தகைய மிரட்டல் பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தீவிர கண்காணிப்புகளை மேற்கொள்வதோடு, இத்தகைய மிரட்டல்களுக்கு காரணமான நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பறக்க தடை விதிப்போம் என ஒன்றிய அரசு கூறுவது வேடிக்கையானது. மிரட்டல் விடுக்கும் நபர்கள் விமான நிலையத்தையே பார்த்திராத நபர்களாக கூட இருக்க கூடும். எனவே மிரட்டலுக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதோடு, சமூக வலைதளங்களுக்கு உரிய கட்டுபாடுகளையும் விதித்து, இத்தகைய போலி தகவல்கள் பரவாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும்.
அதேசமயம் புலி வருது, புலி வருது என்கிற கதையாய் தினமும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வழக்கம்தானே என்கிற எண்ணத்தையும் மக்கள் மத்தியில் விதைப்பது தவறாகும். உண்மையில் அத்தகைய விபரீதம் என்றாவது நிகழ்ந்தால், ஒன்றிய அரசின் பலவீனத்தை அது வெளிக்காட்டும். இந்தியாவில் வானில் விமானங்கள் பறக்கலாமே தவிர, வதந்திகள் இறக்கை கட்டி பறப்பது நல்லதல்ல.
The post போலி மிரட்டல்கள் appeared first on Dinakaran.