ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில், சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சிவபிரகாசம் (58) என்பவர் கடந்த 6ம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பது, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வாசுகி என்பவர் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், போரூர் வட்டம், கொளப்பாக்கம் கிராமம் மேக்ஸ் நகரில் 6003 சதுரடி நிலத்தை பாபு என்பவரிடமிருந்து பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1997ம் ஆண்டு கிரையம் பெற்று அனுபவத்தில் இருந்துவந்தது.
இதேபோல், சென்னை அண்ணாநகரை சேர்ந்த செந்தாமரை என்பவரும் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியில் 2277 சதுரடி நிலத்தை பாபு என்பவரிடமிருந்து பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1997ம் ஆண்டு கிரையம் பெற்று அனுபவத்தில் இருந்துவந்தது. மேற்படி 2 சொத்துக்களையும் பராமரிக்க வேண்டி எனக்கு வாசுகி மற்றும் செந்தாமரை இருவரும் பொது அதிகாரம் கொடுத்துள்ளனர்.
வில்லங்க சான்று போட்டு பார்த்தபோது வாசுகியை போன்று ஆள்மாறட்டம் செய்து, போலியான அடையாள அட்டை மற்றும் போலியான மூலபத்திரங்களை தயார் செய்தும், வாசுகிக்கு நிர்மலாதேவி என்ற மகள் இருப்பது போன்று போலியான சென்ட்டில்மெண்ட் பத்திரப் பதிவு செய்தும், நிர்மலாதேவி வேறு நபர்களுக்கு பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2023ம் ஆண்டு கிரையம் செய்து கொடுத்து மோசடி செய்துள்ளார். மேற்படி போலியான ஆவணங்களில் நந்தகுமார் என்பவர் சாட்சியாக கையெழுத்து போட்டுள்ளார்.
இதன் மதிப்பு சுமார் ரூ.1.20 கோடி ஆகும். இதேபோல், செந்தாமரை என்பவருக்கும் மகன் இருப்பது போன்று போலியான சென்ட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்தும், போலியான மகன் மூலம் வேறு நபர்களுக்கு பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2024ம் ஆண்டு கிரையம் செய்து கொடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் ஆகும். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து, ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் மற்றும் காவல் துணை ஆணையாளர் பி.பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையில் தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த காரம்பாக்கம் பொன்னி நகர் பகுதியில் சேர்ந்த நந்தகுமார் (49) மற்றும் துறைமுகம் மண்ணடி பகுதியைச் சேர்ந்த நிர்மலாதேவி (38) ஆகியோரை கடந்த மாதம் கைது சிறையில் அடைத்தனர்.
இதில், முக்கிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளி சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கராஜ் (59) மற்றும் போரூர் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மெகர் (61) ஆகியோரை நேற்று கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post போலி ஆவணம் தயாரித்து ரூ.1.80 கோடி நில மோசடி தீயணைப்பு நிலைய அதிகாரி, பெண் கைது: தனிப்படை போலீசார் அதிரடி appeared first on Dinakaran.