
அரியலூர்,
அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையானது நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. கடைகள், வீடுகள், நகராட்சி அலுவலகம், போலீஸ் நிலையம் என அதிகளவில் பொதுமக்கள் கூடும் பகுதியாக உள்ளது. இதனால் இந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் சென்றவாறும், சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்தும் காணப்படும்.
இந்நிலையில், இந்த சாலையின் நடுவே சிமெண்டால் ஆன தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளின் நடுவே செல்லும் மின் ஒயர்கள் இந்த தடுப்புக்கட்டையின் வழியே செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல இடங்களில் இந்த மின் ஒயர்கள் சாலையில் விழுந்து கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என "தினத்தந்தி" நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில், விழுந்து கிடந்த மின் ஒயர்களை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.