போர் தொடங்கி ஓராண்டு நிறைவு; காசாவை முற்றிலும் சிதைத்த இஸ்ரேல்

1 month ago 7

சமீபத்திய வரலாற்றில் மிகக் கொடூரமான, அழிவுகரமான தாக்குதலாக அமைந்திருக்கிறது காசா போர். ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காசா முனையிலிருந்து வெறும் 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்களை ஏவியும், எல்லை வேலியை தகர்த்து இஸ்ரேலில் புகுந்த 3000 ஹமாஸ் படையினர் துப்பாக்கியால் சுட்டும் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் தரப்பில் ராணுவ வீரர்கள் உட்பட 1200 பலியாகினர். 250 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றது. இதற்கு பழிக்கு பழியாக காசா மீது வான்வழியாகவும், தரை மார்க்கமாகவும் இஸ்ரேல் தொடங்கிய போர் நேற்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் காசாவில் 41,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். போர் ஓய்வதற்கான எந்த ஒரு சாத்தியக்கூறும் இல்லாமல் இப்போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இனி காசாவில் வாழும் பாலஸ்தீன மக்களின் எதிர்காலம் என்னவாகும்? காசா மீண்டும் மறுஉருவாக்கம் செய்யப்படுமா? என்பது உலகளாவிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. காசாவில் இடிந்து போன வீடுகளை மீண்டும் கட்டுவதற்கே 40 ஆண்டுகள் ஆகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த மாதம் செயற்கைகோள் காட்சிகளின் அடிப்படையில் ஐநாவின் மதிப்பீட்டில், காசாவின் அனைத்து கட்டமைப்புகளிலும் கால் பகுதி அழிக்கப்பட்டுள்ளது அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளது. 2.27 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 66 சதவீத வீடுகள் இடிந்துள்ளன. இதனால் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும்கூட பெரும்பாலான குடும்பங்கள் திரும்பிச் செல்வதற்கு அவர்களுக்கு வீடுகள் இல்லை. பல நூற்றுக்கணக்கான மக்கள் பல ஆண்டுகள் மோசமான கூடார முகாம்களிலேயே தங்க வேண்டியிருக்கும்.

காசாவின் 23 லட்சம் மக்களில் 90% பேர் போரினால் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரைக்கு அருகில் உள்ள பரந்த கூடார முகாம்களில் மின்சாரம், குடிநீர், கழிப்பறைகள் இல்லாமல் பசியும், பட்டினியுமாக வாழ்ந்து வருகின்றனர். அன்றாடம் உணவுக்கு கூட கையேந்தி நிற்கின்றனர். வேலையின்மை சுமார் 80% ஆக உயர்ந்துள்ளது. போருக்கு முன்பு கிட்டத்தட்ட 50% ஆக இருந்தது. இதனால் கிட்டத்தட்ட முழு மக்களும் வறுமையில் வாழ்கின்றனர் என்று ஐநா ஏஜென்சிகள் கூறுகின்றன. வீடுகள், கடைகள், அலுவலக கட்டிடங்கள் இருந்த இடத்தில், இப்போது மனித எச்சங்கள், வெடிக்காத குண்டுகள், வெடிமருந்துகளுடன் கட்டிட இடிபாடுகள் மலை போல் குவிந்துள்ளன. இந்த கழிவுகளை அகற்ற 15 ஆண்டுகளும், சுமார் ரூ.5,300 கோடி ஆகலாம் என ஐநா கூறுகிறது. அப்படியே அதை அப்புறப்படுத்தினாலும் எங்கு கொட்டுவது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஐநா மதிப்பீட்டின்படி, கட்டிட கழிவுகளை கொட்ட சுமார் ஐந்து சதுர கிலோமீட்டர் நிலம் தேவைப்படும். சிறிய இடத்தில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட காசாவில் இதற்கு சாத்தியமில்லை. வீடுகள் மட்டுமின்றி காசாவின் நீர், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் சுமார் 70% அழிந்துவிட்டன அல்லது சேதமடைந்துள்ளன. இதில், ஐந்து கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள், உப்புநீக்கும் ஆலைகள், கழிவுநீர் பம்பிங் நிலையங்கள் ஆகியவை அடங்கும்.

சர்வதேச தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாம், கடந்த டிசம்பரில் உப்புநீக்க ஆலைகள் மற்றும் நீர் உள்கட்டமைப்பை சரிசெய்வதற்கான குழாய்களைக் கொண்டுவருவதற்கான அனுமதிக்கு இஸ்ரேலிடம் விண்ணப்பித்தது. இந்த கப்பலுக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளிக்க 3 மாதங்கள் ஆனது. ஆனால் இன்னும் அந்த கப்பல் காசாவுக்குள் நுழையவில்லை என்று ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
கழிவுநீர் கால்வாய்கள் அழிந்ததால், தெருக்களில் கழிவு நீர் தேங்கி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக வங்கியின் அறிக்கைப்படி, காசாவில் மின் உற்பத்தி ஆலைகள் பாதிக்கும் மேற்பட்டவை அழிக்கப்பட்டுள்ளன. இறுதியாக செயல்பாட்டில் இருந்த ஒரே மின் நிலையம் எரிபொருள் பற்றாக்குறையால் மூடப்பட்டு விட்டது. இதனால் மின்சாரம் இல்லாமல் மக்கள் இருளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட காசாவை மீண்டும் கட்டமைக்க முடியுமா? போர் நிறுத்தம் ஏற்பட்டால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பணக்கார அரபு நாடுகள், பாலஸ்தீன மக்களின் நலனுக்காக காசாவின் மறுசீரமைப்புக்கு பங்களிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளன. அதே சமயம் இனியும் ஹமாசோ அல்லது பாலஸ்தீன போராளிகளோ காசாவை ஆள அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதியாக கூறி உள்ளார். காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் கவனிக்கும் என்றும் கூறி உள்ளார். எனவே, ஹமாஸ் தனது சுரங்க பாதுகாப்பு உள்கட்டமைப்பை மீண்டும் கட்டமைக்கும் சாத்தியம் இருக்கும் வரை இஸ்ரேல் அனுமதிக்க வாய்ப்பில்லை. காசாவில் கூடார முகாம்கள் அமைப்பதற்கான உபகரணங்களை கொண்டு செல்வதே சிரமமாக உள்ள நிலையில், தற்காலிக வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல இதுவரையிலும் யாரும் முயற்சிகள் எடுக்கவில்லை. கடந்த மாத அறிக்கையின்படி, இன்னும் 9 லட்சம் பேருக்கு கூடாரங்கள், படுக்கை மற்றும் இதர பொருட்கள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, காசாவில் பாலஸ்தீன மக்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

 

The post போர் தொடங்கி ஓராண்டு நிறைவு; காசாவை முற்றிலும் சிதைத்த இஸ்ரேல் appeared first on Dinakaran.

Read Entire Article