
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை கொன்று குவித்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் போட்ட வெறியாட்டத்துக்கு பதிலடியாக அந்த நாடு மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது.'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த அதிரடியில், பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குறிவைத்து இந்திய போர் விமானங்கள் குண்டுவீசி அழித்தன.இதனால் நிலைகுலைந்து போன பாகிஸ்தான், இந்தியாவின் எல்லைகளை சீண்டியது. காஷ்மீர் முதல் குஜராத் வரை எல்லையோர பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்கியது.
கோழைத்தனமாக பொதுமக்கள் வாழும் பகுதியில் நடத்திய பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களுக்கும் இந்திய முப்படைகள் கடுமையான பதிலடி கொடுத்தன. அத்துடன் அந்த நாட்டு ராணுவ நிலைகளையும் குறி வைத்து தாக்கின.கடந்த மாதம் 7-ந் தேதி முதல் நடந்த இந்த மோதலில் பெரும் சேதத்தை பாகிஸ்தான் எதிர்கொண்டது. எனவே தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியது.
எனவே இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேசி மோதலை நிறுத்தினர். இதனால் 4 நாட்கள் நடந்த இந்த மோதல் 10-ந்தேதி முடிவுக்கு வந்தது.அதேநேரம் இந்த சண்டை நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதலில் அறிவித்தார். அத்துடன் நில்லாமல், இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை நிறுத்தத்துக்கு தான்தான் காரணம் என தம்பட்டமும் அடித்துக்கொண்டார்.அது ஒரு முறை, இரண்டு முறை அல்லாமல் பலமுறை பொதுவெளியில் கூறினார்.
டிரம்பின் இந்த அறிவிப்பை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தானே வலியவந்து தாக்குதலை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதாக இந்தியா தெரிவித்தது.குறிப்பாக இருநாட்டு ராணுவ நடவடிக்கைக்கான ஜெனரல்களும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த தாக்குதலை நிறுத்தியதாகவும், அதேநேரம் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முழுமையாக முடியவில்லை என்றும் இந்தியா அறிவித்தது.
ஆனாலும் டிரம்பின் இந்த சுயதம்பட்டம் நின்றபாடில்லை. இது இந்தியாவுக்கு பெரும் எரிச்சலை கொடுத்தது. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகளும் வசைபாடி வருகின்றன.
இந்த நிலையில் ஜி-7 உச்சி மாநாட்டுக்காக கனடா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் ஜி-7 உச்சி மாநாட்டில் இருந்து டிரம்ப் முன்கூட்டியே நாடு திரும்பியதால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.எனவே அங்கிருந்தவாறே டிரம்புக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 35 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். முக்கியமாக, ஆபரேஷன் சிந்தூரில் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறியதை பிரதமர் மோடி திட்டவட்டமாக மறுத்தார்.
இதனிடையே மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்திய பிரதமர் மோடி மிகச்சிறந்த நபர், நேற்றிரவு பிரதமர் மோடியிடம் வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து பேசினேன். இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான போரை நான் நிறுத்தியுள்ளேன். போரை நிறுத்துவதற்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனிர் முக்கிய காரணம் என்று டிரம்ப் கூறியுள்ளார். 3ஆம் தரப்பு மத்தியஸ்தத்தை ஏற்க முடியாது என டிரம்பிடம் பிரதமர் மோடி தெளிவுப்படுத்தியிருந்த நிலையில், டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
மீண்டும், டிரம்போ 'நான் தான்' இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் நிறுத்தத்தை செய்தேன் என்று ரிப்பீட் மோடில் மீண்டும் கூறியிருக்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் போரை நிறுத்தியது யார்? என்ற கதை மேலும் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
போரை நிறுத்தியது யார்? என்ற கதை மேலும் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது 39 நாள்கள் கழித்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தான் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து, போரை நிறுத்தியதாக கூறியுள்ளார். பிரதமர் மோடி தொலைபேசி அழைப்பில் டிரம்பிடம், 'இந்தியா எந்த ஒரு மத்தியஸ்தையும் இதுவரையும், இனியும் ஏற்காது' என்று கூறியிருக்கிறார்.பல முறை தொடர்ந்து கூறி வரும் டிரம்பின் கூற்றை மறுக்க ஏன் 39 நாள்கள் ஆனது?
தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு, இது குறித்து மோடி ஏன் நேரடியாக இந்திய மக்களிடமோ, இந்திய நாடாளுமன்றத்திலோ தெரிவிக்கவில்லை.
தொலைபேசி அழைப்பு முடிந்த சில மணிநேரத்திலேயே, டிரம்ப் மீண்டும் அதை கூறியுள்ளார். மேலும், 'போர் நிறுத்தத்திற்கு உதவினார்கள்' என்று டிரம்ப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீரை சமமாக பேசியுள்ளார்.டிரம்ப் அவருக்கு பாகிஸ்தானை பிடிக்கும் என்று கூறியுள்ளார் மற்றும் ஜெனரல் அசிம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் மதிய உணவு விருந்து கொடுக்கப்பட்டதாகவும் பிரஸ் ரிலீஸ் வெளியாகி உள்ளது.
டிரம்ப் மீண்டும் இதை தொடர்ந்து முன்வைத்தால், பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் சம்பந்தமான விவகாரத்தில் இந்தியா அமெரிக்கா உடனோ அல்லது அதன் வெளியுறவுத் துறையுடனோ எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவதை மறுக்குமா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.