சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருந்த நிலையில் டாஸ்மாக் பணியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. 22 வருடங்களாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், கேரளாவில் உள்ளதுபோல மதுபான கடைகள் நிர்வாக நடைமுறையை தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் வரும் 11ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு டாஸ்மாக் பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்திற்கு டாஸ்மாக் நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் இன்று காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் தொழிற்சங்கத்தினர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
The post போராட்டம் நடத்தவிருந்த நிலையில் டாஸ்மாக் பணியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.