‘போன் பே’ உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவித மோசடி: பொதுமக்கள் உஷாராக இருக்க சைபர் க்ரைம் எச்சரிக்கை

2 months ago 9

சென்னை: போன் பே உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவகை பண மோசடி நடந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் போன் பே உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்தப்படுவதன் மூலம் மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெறுவதாக சமீபத்தில் புகார்கள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் போன் பே வழியாக அவர்களுக்கு தெரியாமல் அல்லது அனுமதியின்றி அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து எதிர்பாராத முறையில் பணத்தை மோசடியாக திருடுவதாக புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் மீது விசாரணை நடத்திய போது, மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்து அமேசான் பே க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் இருந்து தேசிய சைபர் க்ரைம் பிரிவில் 7 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, போன் பே மூலம் அனுமதி இல்லாத பணப்பரிவர்த்தனைகள் பற்றிய விசாரணையில் பிரதமர் கிஷான் யோஜனா என்ற செயலியை மோசடி நபர்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி பல்வேறு சேனல்கள் மூலம் குறிப்பாக வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இது பயனாளிகளின் எஸ்எம்எஸ் பயன்பாட்டையும் மற்றும் சாதனங்களை இயக்குவதையும் கட்டுப்படுத்தக் கூடியது. மோசடிக்காரர்கள் எஸ்எம்எஸ்.ஐ வழிமறித்து அதன் மூலம் யுபிஐ செயலியில் மாற்றம் செய்து மோசடிக்கு பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு மோசடியாக சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு யுபிஐ செயலிகளில் பயன்படுத்தி அனுமதி இல்லாத பரிவர்த்தனைகளை மோசடியாக செய்கின்றனர்.

எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க கீழ்காணும் சில அறிவுரைகள் வழங்கப்படுகிறது. அதன் விவரம்:
* உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும், ஏதாவது அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

* தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வதையும், தேவையில்லாத செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதையும் தவிர்க்கவும்.

* எந்தச் சூழ்நிலையிலும் முக்கிய யுபிஐ தரவுகளை அல்லது ஓடிபி -ஐ பகிர்வதை தவிர்க்கவும்.

* நிதிப் பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.

* அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் மற்றும் தெரியாத அல்லது உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும்.

* இதுபோன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால் சைபர் க்ரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-க்கு டயல் செய்து சம்பவத்தை புகார் அளிக்கவும், அல்லது www.cybercrime.gov.in என்ற இணையத்தில் உங்களது புகாரை பதிவு செய்யவும்.

The post ‘போன் பே’ உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவித மோசடி: பொதுமக்கள் உஷாராக இருக்க சைபர் க்ரைம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article