போதையில் ‘டான்ஸ்’ ஆட அழைத்த ஊழியர்: நாடாளுமன்றத்தில் பகீர் புகார்

1 day ago 4

சிட்னி: ஆஸ்திரேலியா பெண் எம்பியிடம் மது அருந்திவிட்டு டான்ஸ் ஆட அழைத்த ஊழியர் மீது நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவிடம் அந்த எம்பி புகார் அளித்தார். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஹிஜாப் அணிந்த முதல் முஸ்லிம் பெண் செனட்டராக ஃபாத்திமா பேமன் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் நாடாளுமன்ற கண்காணிப்பு அமைப்பிடம் அளித்த புகாரில், ‘நாடாளுமன்றத்தின் மூத்த ஊழியர் ஒருவர் என்னை மது அருந்த கட்டாயப்படுத்தினார். மேஜையில் என்னை டான்ஸ் ஆடும்படி கேட்டுக் கொண்டார். நான் மது அருந்தமாட்டேன் என்று கூறியும், அவர் மது போதையில் என்னிடம் தேவையற்ற கருத்துகளை கூறினார். இந்த சம்பவம் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் நடந்தது.

இதைத் தொடர்ந்து, நான் அவரிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினேன். எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் எப்போது நடந்தது அல்லது அந்த சக ஊழியர் யார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால், இந்த விவகாரம் ஆஸ்திரேலிய அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இஸ்லாமிய பெண்களின் உடைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட ஒன் நேஷன் கட்சியின் செனட்டர் பவுலின் ஹான்சன் பேசிய கருத்துகளுக்கு ஃபாத்திமா பேமன் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post போதையில் ‘டான்ஸ்’ ஆட அழைத்த ஊழியர்: நாடாளுமன்றத்தில் பகீர் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article