
திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் வின்சி அலோசியஸ். இவர் 2019-ம் ஆண்டு வெளியான "விக்ருதி" என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். இவர் ரேகா என்ற படத்தில் நடித்து கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வின்சி அலோசியஸ் போதைப் பொருள் பன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இது குறித்து விளக்கம் அளித்து அவர் கூறியதாவது,
"நான் சமீபத்தல் ஒரு மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். அந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடித்த முன்னணி நடிகர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவதை நேரடியாக பார்த்தேன். அந்த நடிகர் போதையில் என்னிடமும், மற்றொரு நடிகையிடமும் அத்துமீறினார். அதனால் அந்த படத்தில் இருந்து நான் விலக முடிவு செய்தேன். இயக்குனரும், தயாரிப்பாளரும் என்னிடம் மன்னிப்பு கேட்டதாலும், வேறு வழியின்றி நடித்துக் கொடுத்தேன்.
இதனால் தான் போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறினேன். தனிப்பட்ட முறையில் அவர் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால், பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தி மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.