வாஷிங்டன்: போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஹாரியை நாடு கடத்தப் போவதில்லை என்று டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அரச குடும்பத்திற்குள் ஏற்பட்ட சண்டையால், கடந்த 2020ம் ஆண்டில் இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மார்க்கலுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு குடிபெயர்ந்தார். கோகோயின், கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்தியதாக ஹாரி தனது சுய சரிதையில் குறிப்பிட்டிருந்தார்.
அப்படியிருக்கும் போது, ஹாரிக்கு எப்படி அமெரிக்காவிற்கு செல்ல விசா கிடைத்தது? என்பது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதற்கிடையில், இளவரசர் ஹாரியின் விசா தகவல்களை வெளியிடக் கோரி ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் அமைப்பு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது. இருப்பினும், ஹாரியின் விசா விவரங்கள் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அமெரிக்காவின் விசா சட்டங்களின் கீழ், போதைப்பொருள் பயன்படுத்தும் நபர்களுக்கு விசா வழங்கப்படுவதில்லை. அப்படியிருந்தும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஹாரிக்கு எப்படி விசா கிடைத்தது? என்ற கேள்வி இன்றும் எழுப்பப்பட்டு வருகிறது.
தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தும் விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் பட்டியலில் இளவரசர் ஹாரியும் இடம் பெறுவாரா? என்ற கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து டிரம்ப் அளித்த பேட்டியில், ‘வேல்ஸ் இளவரசர் ஹாரியை நாடு கடத்தப் போவதில்லை. ஹாரிக்கு எதிரான விசா ெதாடர்பான வழக்கைத் தொடரும் எண்ணம் எனக்கு இல்லை. அவரை அவரது விருப்பத்திற்கு விட்டுவிடுவேன். அவருக்கு தனது மனைவியுடன் நிறைய பிரச்னைகள் உள்ளன. அதேநேரம் மேகன் மார்க்லே அற்புதமான பெண்’ என்று கூறினார்.
The post போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம்; இங்கிலாந்து இளவரசர் ஹாரியை நாடு கடத்தப் போவதில்லை: டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.