தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போதையில் சிகிச்சை அளித்த டாக்டர்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

6 hours ago 2

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஆண்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் காத்திருந்தனர். அப்போது, பொது மருத்துவ பிரிவை சேர்ந்த டாக்டர் வந்துள்ளார். அவர், மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர், புறநோயாளிகள் பிரிவுக்கு சென்று சுமார் ஒன்றரை மணி நேரமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த பெண், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு சிகிச்சை பெறுவதற்காக காத்திருந்தார். அப்போது, டாக்டர் மது போதையில் இருப்பதை பார்த்த அந்த பெண், தனது செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர் மருத்துவமனையில் இருந்த பிற டாக்டர்களிடமும் புகார் செய்தார். சிறிது நேரத்தில் அந்த பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் பணியில் இருந்த டாக்டர் மாற்றப்பட்டு, வேறு டாக்டர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில், விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட டாக்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

The post தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போதையில் சிகிச்சை அளித்த டாக்டர்: விளக்கம் கேட்டு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article