போதைப் பொருட்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதா..? கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்

3 months ago 23

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது போதைப்பொருள் வழக்கிற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்த தமிழ்நாடு கவர்னர், தி.மு.க. அரசின் போதைப் பொருட்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தலாமா? என்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சங்கரன்கோவிலில் நடந்த கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாடு போலீசார் ஒரு கிராம் கூட ரசாயன போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்யவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சாவை மட்டுமே பிடித்துள்ளனர்" என்று வழக்கம் போல் அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியிருப்பதற்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கவர்னர் மாளிகைக்குள்ளும் வெளியேவும் அரசியல் பேசுவதையும் - அவதூறுகளை அள்ளி வீசுவதையும் தனது பொழுதுபோக்காக வைத்திருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. கவர்னர் மாளிகையை "கமலாலயம்" ஆக மாற்றி, தான் இருப்பது கவர்னர் பதவி என்பதையே மறந்து செயல்படும் கவர்னர் ரவி போன்ற கவர்னர்கள் அந்தப் பதவிக்கு தினந்தோறும் இழுக்கு தேடி வருவது கவலையளிக்கிறது.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளன. 'போதையில்லா தமிழ்நாட்டை' உருவாக்க நேர்மையான நடவடிக்கைகளை எங்கள் முதல்-அமைச்சரே முன்னின்று தொடர்ந்து எடுத்து வருகிறார். வரலாற்றிலேயே முதன்முறையாகப் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகளின் முதல் மாநில மாநாட்டை 2022 ஆகஸ்ட் 10-ஆம் நாள் முதல்-அமைச்சர் நடத்தினார். இப்படியொரு மாநாட்டை அ.தி.மு.க. ஆட்சியில் நடத்தவே இல்லை! தி.மு.க. ஆட்சியில் கடந்த மூன்றாண்டுகளில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளால், இன்றைக்கு போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

கவர்னர் அவர்கள் முழு நேர அரசியல்வாதியாக இருப்பதால் நிர்வாகத்தில் நடப்பது தெரிந்திருக்க நியாயமில்லை. ஆகவே தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை எப்படி எடுக்கப்படுகிறது என்பதை சுருக்கமாக கூறி தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.

போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு சிஐடி (NIB CID) தமிழ்நாடு முழுவதும் 15 இடங்களில் செயல்படுகிறது. போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு மற்றும் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக NIB CID நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுடன் (NCB) நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது NIB CID. கஞ்சா செடிகளை பயிரிடுதல் மற்றும் விற்பனை செய்தல், இதர சட்ட விரோத மருந்துகளை தயாரித்தல் போன்றவை தொடர்பான தகவல்களை NCB பகிர்ந்து கொள்கிறது. போதைப் பொருள் தடுப்பு முயற்சிகளின் வரம்பை விரிவுபடுத்த NIB CID-யுடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவும் இணைந்து செயல்பட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இவை தவிர மாநிலத்தில் உள்ள 1368 சட்டம் - ஒழுங்குக் காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட/மாநகரங்களில் உள்ள 100 மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகளும் போதைப் பொருள் தடை சட்டத்தை அமல்படுத்த அதிகாரம் பெற்றுள்ளன. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் 42 கடற்சார் காவல் நிலையங்கள், 24 நவீன உயர் சக்தி இயந்திரப் படகுகள் வழங்கப்பட்டு கடற்கரை வழியாக போதைப் பொருள்கள் கடத்தலை கூர்ந்து கவனித்து தடுத்து வருகிறது. காவல் துறையின் கடுமையான நடவடிக்கையால் தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடப்படுவது அறவே ஒழிக்கப்பட்டு 'பூஜ்ஜிய சாகுபடி' என்ற நிலையை எட்டியிருக்கிறோம்.

போதை பொருட்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் 2022-ஆம் ஆண்டு 10,665 வழக்குகள் போடப்பட்டன. 19 வெளிநாட்டினர் உட்பட 14,934 பேர் கைது செய்யப்பட்டனர். 28,383 கிலோ கஞ்சா, 63,848 மாத்திரைகள், 98 கிலோ இதர போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களைவிட முறையே 61 சதவீதம் மற்றும் 33 சதவீதம் அதிகமானது என்பதை கவர்னர் தனது வசதிகேற்ப மறந்துவிட்டார்.

2023-ஆம் ஆண்டில், குற்றம்சாட்டப்பட்ட 14,770 பேர் மீது 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23,364 கிலோ உலர் கஞ்சா, 0.953 கிலோ ஹெராயின், 39,910 மாத்திரைகள், 1,239 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், மெத்தாம்பேட்டமைன், ஆம்பிடமைன் மற்றும் மெத்தகுலோன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு (2024) ஆகஸ்ட் வரை, 9,750 குற்றவாளிகள் மீது 6,053 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15,092 கிலோ கஞ்சா 90,833 மாத்திரைகள் 93 கிலோ மெத்தாகுலோன் மற்றும் 228 இதர கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல்- பா.ஜ.க. மேடையில் நிற்பவராக தன்னை மாற்றிக் கொண்டு பச்சைப் பொய்களை ஒரு கவர்னர் பேசுவது வெட்க கேடானது. புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே கவர்னர் சொன்னது அப்பட்டமான பொய் என்பது புரியும். "கஞ்சா அல்லாத போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் மத்திய அரசின் அமைப்புகளை கைப்பற்றுகின்றன" என கவர்னர் சொன்னது வடிக்கட்டிய பொய் என்பது விளங்கும்.

போதைப் பொருள் தொடர்பாக 2022-ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை, 1682 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களைப் பொறுத்தவரை இதுநாள் வரையில் 3,914 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 2022 ஆகஸ்ட் முதல் 2024 ஆகஸ்ட் வரையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ரூ.18.03 கோடி சொத்துகளும் 8,949 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையால்தான் 2022-இல் நீதிமன்றங்களில் 2,414 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதில் 80 சதவிகிதம் (1,916) வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன. 2023-இல் தீர்க்கப்பட்ட 3,567 வழக்குகளில், 84 சதவிகித (2988) வழக்குகள் தண்டனையில் முடிவடைந்தன. போதைப் பொருட்களுக்கு எதிராக எடுத்த தீவிர நடவடிக்கை விவரங்களை எல்லாம் ஒரு ஆளுநரால் கேட்டு வாங்கி தெரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால், அதை தெரிந்து கொண்டால் பொய்க்குற்றம் சாட்ட முடியாதே என்பதற்காக அரசின் மீது அவதூறுகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.

போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிப்பது மட்டுமல்ல-இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு தி.மு.க. ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 2022 செப்டம்பர் 11-ஆம் நாள் எங்கள் முதல்-அமைச்சர் தலைமையிலேயே சென்னையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை மாநில அளவிலான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒரே நாளில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். முதல்-அமைச்சர், போதைப் பொருள் விற்பனை மற்றும் துஷ்பிரயோகத்தை ஒழிக்க ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். போதைப் பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு காணொளி 1.5 கோடி மாணவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'போதைக்கு எதிரான குழுக்கள்' உருவாக்கப்பட்டன.

அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களே குட்கா விற்பனைக்கு துணை போனார்கள். குட்கா வழக்கில் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் மீதான வழக்கிற்கு அனுமதி கொடுக்கும் கோப்பை கூட ஒரு வருடத்திற்கும் மேலாக கிடப்பில் போட்டு வைத்திருந்த கவர்னர், போதைப் பொருள் ஒழிப்பு பற்றி இப்போது வாய்கிழியப் பேசுவது விந்தையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது என்பதை விட, தி.மு.க. அரசின் தீவிர நடவடிக்கையைக் கொச்சைப்படுத்திப் பேசும் தார்மீக உரிமை ஆளுநருக்கு இருக்கிறதா? என்று கேட்க விரும்புகிறேன்.

NDPS என்ற போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் கைதானவர்களில் பா.ஜ.க. வைச் சேர்ந்த ரவுடிகள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். அத்தகைய போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழ்நாடு பா.ஜ.க.தான். தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 16 குற்றவாளிகளை பா.ஜ.க. கட்சியில் இணைத்துள்ளது.

சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, மதுரை உள்ளிட்ட காவல் பகுதிகளில் மட்டும் NDPS Act-இல் கைதான பா.ஜ.க.வைச் சேர்ந்த 14 ரவுடிகள் மீது 23 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. போதைப் பொருள் வழக்குகளில் இருக்கும் பா.ஜ.க.வினரின் பிம்பத்தை மறைக்க கவர்னர் ரவி, தி.மு.க. ஆட்சி மீது அநியாயமாகப் பொய் குற்றச்சாட்டை போகிற போக்கில் வீசிச் செல்கிறார். இதற்காக அரசு பணத்தில் சென்று பிரச்சாரம் செய்கிறார் என்பது அவர் வகிக்கும் பதவிக்கும் - அரசியல் நெறிமுறைகளுக்கும் உகந்தது அல்ல!

இந்தியா முழுவதும் கூட பா.ஜ.க. நிர்வாகிகள் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் கவர்னர் ஏன் பேச மறுக்கிறார். போதை பொருள்களின் தலைநகர் குஜராத் பற்றியெல்லாம் ஏன் வாய் திறப்பதில்லை?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article