போதை மறுவாழ்வு மையம் எத்தனை துவக்கப்பட்டது?: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

1 week ago 2

மதுரை: போதை மறுவாழ்வு மையங்கள் எத்தனை துவக்கப்பட்டது என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கைத்தறி நகரை சேர்ந்த மேகலா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை கைத்தறி நகரில் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் வசித்து வருகின்றோம். மதுரை கீழக்குயில்குடியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடையை மாற்றி எங்கள் பகுதியில் திறப்பதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்த கடை திறக்கக்கூடிய இடத்திற்கு அருகே அரசு பள்ளி, வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. இவ்வாறு உள்ள சூழலில் மதுக்கடை திறப்பது சட்ட விதிகளுக்கு முரணானது.

இந்த கடை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த கடை திறக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது இந்த பகுதியில் கடை திறக்க தடைவிதித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் போதை மறுவாழ்வு மையங்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தமிழ்நாட்டில் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில் எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளது. போதை மறுவாழ்வு மையம் எத்தனை துவங்கப்பட்டுள்ளது. அதில் எத்தனை பேர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். எத்தனை பேர் சிகிச்சை பெற்று சென்றனர் என்பது தொடர்பான முழு விவரங்களை நிலை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்’’ என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

 

The post போதை மறுவாழ்வு மையம் எத்தனை துவக்கப்பட்டது?: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article