போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 5 பேர் மீது சேலம் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு

4 hours ago 5


சேலம்: போதை கும்பல் தலைவனை கடத்திச் சென்ற வழக்கில், ராக்கெட் ராஜா உள்பட 5 பேர் மீது சேலம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் முதல் விசாரணை தொடங்குகிறது. இலங்கையை சேர்ந்த பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் பிலாலுதீனை சென்னையில் போலீசார் கைது செய்தனர். அவருக்கு கடந்த 2002ம் ஆண்டு, 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. உடல்நலம் சரியில்லை என கூறி, சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதன்பின்னர், குடல் இறக்க நோய் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம்தேதி, சேலம் ஸ்ட்ராங் ரூமில் இருந்த பிலாலுதீனை மர்மகும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது. இதுதொடர்பாக, சேலம் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை, திட்டம் போட்டு கடத்தி சென்று இலங்கைக்கு தப்ப வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதில், பனங்காட்டுபடை மக்கள் இயக்கத்தின் தலைவர் ராக்கெட் ராஜா, தூத்துக்குடி, திருநெல்வேலியை சேர்ந்த 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு சேலம் ஜேஎம் 3 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவர்களில் ராக்கெட் ராஜா, அந்தோணி, ராமசாமி, அருள், பாலு (எ) பாலசுப்பிரமணி ஆகிய 5 பேர் மீதான வழக்கு மட்டும் கடந்த 2010ம் ஆண்டு சேலம் 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது. இவ்வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும் என ராக்கெட் ராஜாவும் அருளும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி கலைவாணி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.குற்றம்சாட்டப்பட்ட ராக்கெட் ராஜா, அந்தோணி, ராமசாமி, அருள், பாலு (எ) பாலசுப்பிரமணி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகினர். அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை வரும் ஜூன் மாதம் 19ம்தேதிக்கு நீதிபதி கலைவாணி தள்ளிவைத்தார். அன்று முதல் விசாரணை தொடங்கும். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜரானார்.

The post போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 5 பேர் மீது சேலம் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article