போதை ஒழிப்பு மாரத்தான் போட்டி பகுதியில் பரபரப்பு போதையில் கார் ஓட்டி விபத்து தவெக நிர்வாகிக்கு தர்ம அடி: போலீஸ் வழக்குப்பதிந்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

3 hours ago 1

திருமயம்,பிப்.3: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருமயம் அண்ணா சீரணி கலையரங்கில் தொடங்கிய மாரத்தான் போட்டி திருமயம் கடைவீதி, பொன்னமராவதி விளக்கு பகுதியில் வந்த போது அவ்வழியாக தவெக கட்சி கொடியுடன் வந்த கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த குடிநீர் டேங்கர் லாரி மீது மோதியது.

மாரத்தான் போட்டி நடுவில் அதிவேகமாக வந்த கார் விபத்துக்குள்ளானதில் விபத்தில் சிக்காமல் இருக்க அனைவரும் அலறியடித்து நாலாபுறமும் ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அந்த காரை சுற்றிவளைத்து, அதிலிருந்த 3 பேரையும் இறக்கிய போது அவர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், டிரைவர் உள்பட 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்த திருமயம் போலீசார், 3 பேரையும் மீட்டு திருமயம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் காரை தாறுமாறாக ஓட்டி வந்தது சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றிய தவெக நிர்வாகி மணி என்பதும், உடன் வந்த 2 பேரும் நண்பர்கள் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிந்து, மணிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

The post போதை ஒழிப்பு மாரத்தான் போட்டி பகுதியில் பரபரப்பு போதையில் கார் ஓட்டி விபத்து தவெக நிர்வாகிக்கு தர்ம அடி: போலீஸ் வழக்குப்பதிந்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article