போடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் 50 சதவீதம் நிறைவு: இருபுறமும் சாலை விரிவாக்கம் ஜரூர்

3 days ago 4


போடி: போடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பாலத்தின் அருகில் வாகனப் போக்குவரத்திற்காக இருபுறமும் சாலை விரிவாக்கப் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. போடி-மதுரை ரயில்வே லைன் அகலப்பாதையாக மாற்றப்பட்டு 2021 முதல் பயணிகள் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தத் தடம் மின்மயமாக்கம் செய்யப்பட்டு மின்சார இன்ஜினில் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த தடமானது போடி முந்தல் சாலையில் ரெட்டை வாய்க்கால் அருகே கடந்து செல்கிறது. அங்கு கிராசிங் உள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு இதற்கான பணிகள் துவங்கியது. ஆனால் 2 தூண்கள் அமைக்கப்பட்ட பின்னர் பணிகள் முடங்கியது.

இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்த பின்பு கூடுதலாக ரூ.22 கோடி நிதி ஒதுக்கி பணிகளை தொடர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து பணிகள் விரைவு படுத்தப்பட்டு தற்போது திட்டமிடப்பட்டுள்ள 23 தூண்களில் 16 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தூண்களில் இணைப்பு கர்டர்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மொத்தமாக சுமார் 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த மேம்பாலப் பணிகளால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் கேரளா மற்றும் தமிழக அரசு பஸ்கள், தனியார் பஸ், லாரிகள், டிராக்டர்கள், விவசாய வாகனங்கள், இடுக்கி மாவட்டத்திலுள்ள தோட்டத்திற்கு ஜீப் வேன்களில் செல்லும் தொழிலாளர்கள், விவசாயிகள் சிரமமடைந்து வந்தனர்.

இந்த நிலையில் பாலப் பகுதியில் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்து தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது ஜரூராக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்த பின்னர் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post போடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் 50 சதவீதம் நிறைவு: இருபுறமும் சாலை விரிவாக்கம் ஜரூர் appeared first on Dinakaran.

Read Entire Article