கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியில் இன்று கூடிய வாரசந்தையில் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு குவிந்தது. தீபாவளியையொட்டி 5 மணி நேரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரசந்தை நடந்து வருகிறது. இன்று கூடிய சந்தைக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் 5 ஆயிரம் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
வரும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், ஆடுகள் வரத்து கடந்த வாரத்தை விட அதிகமாக இருந்தது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் கறிக்கடைக்காரர்கள் ஆடுகளை வாங்க குவிந்தனர். இதனால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ஒரு கிடா ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையும், வெள்ளாடு ரூ.6,000 முதல் ரூ.9,000 வரையும் விற்பனை ஆனது. இன்று கூடிய சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ஆட்டு இறைச்சி விலை வழக்கமாக 1 கிலோ ரூ.750க்கு விற்பனை ஆகும். தற்போது பண்டிகை காலம் என்பதால் ஒரு கிலோ ரூ.900க்கு விற்பனை நடைபெறும். எனவே இன்று கூடிய சந்தையில் வியாபாரிகள் 5 மணி நேரத்திற்குள் போட்டி போட்டு ஆடுகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர், என்றனர்.
The post போச்சம்பள்ளி வாரசந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.