போக்சோ வழக்கில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு இடைக்கால ஜாமீன்

3 months ago 26

ஆந்திரா,

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல பாடல்களுக்கு நடனம் அமைத்து பிரபலமானவர் ஜானி மாஸ்டர். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த அலா வைகுண்டபுரமுலோ படத்தில் இடம்பெற்ற 'புட்டா பொம்மா' பாடல், விஜய்யின் பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடல் ரசிகர்களிடம் மிகவு பிரபலமானவை. தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா' பாடலுக்காக தேசிய விருது வென்று மாஸ் காட்டிய ஜானி மாஸ்டர், பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகியிருந்தார்.

இந்த சூழலில் நடன கலைஞரான இளம்பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் என்றழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் பாலியல் புகார் அளித்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜானி மாஸ்டர் மீதான புகாரை அடுத்து, அவரை தனது ஜன சேனா கட்சியில் இருந்து நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் நீக்கினார். இதன் தொடர்ச்சியாக தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்தில் இருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்ட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது, போக்சோ வழக்கும் பாய்ந்தது. இந்த சூழலில், தலைமறைவான ஜானி மாஸ்டரை கைது செய்ய நான்கு தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டது. பின்னர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரை ஐதராபாத் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைந்தனர்.

இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்காக போக்சோ வழக்கில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Read Entire Article