சென்னை: குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் 15வது ஊதிய ஒப்பந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் 13 தொழிற்சங்கங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
73 தொழிற்சங்கங்கள் பங்கேற்க இருந்த நிலையில், வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் தேமுதிக தொழிற்சங்க நிர்வாகிகள் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு நேற்று கூட்டத்தில் பங்கேற்றனர், கூட்டத்தில், போக்குவரத்து துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி, மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பிரபு சங்கர், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் தொமுச மற்றும் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. 13 சங்கங்களும் அவர்களுடைய கோரிக்கைகளை முழுமையாக கூறினர். அதை அமைச்சரும் கேட்டார். ஊதிய உயர்வை தீர்மானிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களின் பஞ்சப்படி நிலுவையை முழுமையாக வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போதே அவர்களின் பணப்பலன்களை பெற்று தரும் நிலையை உருவாக்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியுள்ளோம். நாளை பேச்சுவார்த்தை நடந்த பிறகு, ஓய்வு பெற்றவர்களின் பிரச்னை, பஞ்சப்படி பிரச்னை படிப்படியாக அரசு சரிசெய்யும். கடந்த ஆட்சியில் நிறைய குளறுபடிகள், தவறுகள் நடந்துள்ளன. அந்த ஆட்சியில் போடப்பட்ட அரசாணைகளால் பல விஷயங்களை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. அந்த அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.
The post போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு appeared first on Dinakaran.