சென்னை,
பணிக்கான பணப்பலன்களைக் கூட வழங்க மறுக்கும் தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட எந்தவித பணப்பலன்களும் தற்போதுவரை வழங்கப்படவில்லை என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு பல ஆண்டுகளாக முறையாக வழங்கப்படாத நிலையில், அது தொடர்பான வழக்கில் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அடுத்தடுத்து மேல்முறையீடு செய்து தி.மு.க. அரசு காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வைக் கூட வழங்காமல் "அரசுக்கு கருணை இருக்கிறது ஆனால் நிதி இல்லை" என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.
அரசின் மற்ற துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அனைத்து விதமான சலுகைகளையும் வழங்கிவரும் தி.மு.க. அரசு, போக்குவரத்து ஊழியர்களை மட்டும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துவதால் சுமார் 15 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பணப்பலன்களைப் பெறாமலேயே உயிரிழந்திருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இனியும் மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தாமல், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அனைத்து விதமான பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.