கோவை, ஏப். 24: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 8-க்கும் ேமற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்செயல் தொடர்பாக, பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் புகார் அளித்ததின்பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். பின்னர், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அதன்பின்னர் சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25), ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 9 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கில், 50-க்கும் மேற்பட்ட அரசுத்தரப்பு சாட்சியங்கள், சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இவ்வழக்கில், அரசு தரப்பு சாட்சியங்கள் நிறைவுபெற்றுள்ளன. எதிர்தரப்பு சார்பில் குறுக்கு விசாரணையும் நிறைவுபெற்றுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கில் கடந்த இரு வாரங்களாக இருதரப்பு வக்கீல்கள் வாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து, அனைத்து நாட்களிலும் இருதரப்பு வாதம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்றும் இரு தரப்பு வாதம் நடந்தது. பின்னர், இவ்வழக்கு விசாரணை இன்று (வியாழன்) மீண்டும் நடைபெறும் என நீதிபதி ஆர்.நந்தினிதேவி உத்தரவிட்டார்.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை விறுவிறுப்பு: இன்று மீண்டும் விசாரணை appeared first on Dinakaran.