‘‘பொறியாளர் ஒருவரின் தர்பார் கட்டுக்கடங்காமல் போவதாக புகார் வருகிறதே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு உதவி பொறியாளர் பணிபுரிகிறார். அவர், தனது ரெகுலர் வேலையை விட்டுவிட்டு, சக ஊழியர்களை, உயர் அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் கச்சிதமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக, சென்னையில் உள்ள டாப் மோஸ்ட் அதிகாரி ஒருவரை தனது கைக்குள் போட்டு வைத்துள்ளார். அவர், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகராட்சியில் துணை கமிஷனராக பணியாற்றி, தற்போது பதவிஉயர்வு பெற்றிருக்கிறார். அவரிடம், தனக்கு ஒத்துக்போகாத அதிகாரிகள் பட்டியலை நீட்டி, டிரான்ஸ்பர் ஆர்டர் போட வைத்து விடுகிறார். சமீபத்தில்கூட 2 பெண் பொறியாளர்களை இடமாற்றம் செய்ய வைத்துவிட்டார். இத்துறை அமைச்சருக்கே தெரியாமல், உயரதிகாரியை கைக்குள் போட்டுக்கொண்டு, அவர் போடும் ஆட்டம் தாங்கல…, என்கிறார்கள் இங்குள்ள ஊழியர்கள். ‘’புடிச்சாலும் புளியங்கொம்பை புடிக்கணும்…’’ என்பதுபோல், அவர் மேலிடத்தை பிடித்து வைத்துள்ளதால், இங்குள்ள உயர்அதிகாரிகள் பலரும் அவரது விஷயத்தில் தலையிட பயப்படுகிறார்கள்… ‘’நமக்கு எதுக்குப்பா வம்பு…’’ என ஒதுங்கிக்கொள்கின்றனர். அதனால், மிரட்டல், உருட்டல்களில் ஈடுபடுகிறார். கரன்சி குவிப்பதில் அவரது தர்பார் நீடிக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘உஷாரய்யா உஷாரு என புல்லட்சாமி கட்சியை கிண்டலடிக்குதாமே அதிமுகவில் ஒரு தரப்பு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில், ஒன்றிய ஆளும் கட்சி தரப்புக்கு போட்டியாக புல்லட்சாமியும் தனது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை துவங்கியுள்ளார். இத்தனை ஆண்டாக எதையும் கண்டு கொள்ளாமல் இருந்த புல்லட்சாமி தரப்பு திடீரென கட்சி முன்னணி நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்ததோடு சிலருக்கு பொறுப்புகளை வழங்கவும், புதிய உறுப்பினர்களை தொகுதி வாரியாக சேர்க்கவும் திடீரென முடிவெடுத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு கிராமப்புறத்தில் நடந்த புல்லட்சாமி கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல் வெடித்தது. இதனிடையே புல்லட்சாமி, தனது கட்சியை பலப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கையை கேலிக்கூத்தாக்கி வருகிறது அதிமுகவில் ஒருதரப்பு. அதாவது தேர்தல் வரப்போகுதுல்ல… அதனாலதான் புல்லட்சாமிக்கு தொண்டர்கள் ஞாபகம்… நிர்வாகிகள் மீதும் இத்தனை பாசம்… என்று விமர்சித்துள்ள அத்தரப்பு, வடிவேலு காமெடியான உஷாரய்யா… உஷாரு… ஓரஞ்சாரம் உஷாரு… என்ற காமெடியுடன் மேற்கண்ட கூட்ட சலசலப்பு வீடியோவையும் இணைத்து வலைதளத்தில் பரப்பி விட்டுள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விலக்கப்பட்டவரை மீண்டும் சேர்க்கும் முஸ்தீபில் இருக்கிறார்களாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘ஆமா..கடலோர மாவட்ட இலை கட்சியில் சுந்தரமானவரு தான் மீண்டும் மா.செ. பொறுப்புக்கு வருவாரு என்று பேசிக்கிறாங்க. நட்பு உடைந்து எதிரியாகி விட்ட கட்சி சார்ந்த இயக்கத்தினர் சமீபத்தில் நடத்திய ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைச்சாரு என்று, சுந்தரமானவரின் கட்சி பதவிகளை சேலத்துக்காரர் பறிச்சாரு. ஆனாலும் இன்னும் அந்த மாவட்டத்துக்கு பொறுப்பானவராக யாரையும் நியமிக்க வில்லையாம். கேப்டன் இல்லாத கப்பல் போல, அந்த மாவட்டத்துல இலை கட்சி தள்ளாடிக் கொண்டு இருக்காம். இன்னும் 4 நாளில் இலை கட்சியின் தொடக்க விழாவை கொண்டாட வேண்டும். யார் சார்பில அறிக்கை விட்டு, தொண்டர்களை கொண்டாடுங்க என அறிவிப்பது என தெரியாத நிலை உள்ளதாம். தற்காலிகமாக என்று சொல்லி தான், சுந்தரமானவரின் கட்சி பதவியை சேலத்துக்காரர் எடுத்துருக்காரு. இதற்கான விளக்கத்ைத சுந்தரமானவரு சொல்லியாச்சாம். சேலத்துக்காரருக்கும் திருப்தியாகி விட்டதாக பேசிக்கிறாங்க. எனவே மீண்டும் சுந்தரமானவரே மா.செ. பொறுப்புக்கு வரலாம் என்று ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் இருக்காங்களாம். ஆனால் இந்த விஷயத்துல கிரீன் பெயரை கொண்ட முன்னாள் மாஜி, கடும் எதிர்ப்பில் இருக்காராம். எப்படி கட்சி கட்டுப்பாட்டை மீறி போகலாம் என்று இலை கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்கு தொடர்ந்து தூபம் போட்டு வருகிறாராம்.
அது மட்டுமில்லாமல் கிரீன் பெயரை கொண்ட மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள், எங்கள் அண்ணன் தான் அடுத்த மா.செ. என்று சமூக வலை தளங்களில் தகவல்களை பரப்பி வருகிறார்களாம். பொதுவாக ஒரு மா.செ. பதவியை பறிச்சா அடுத்த நிமிஷமே பொறுப்பாளரை போடுறது தான் வழக்கம். எங்கள் அண்ணன் பதவியை பறிச்ச பிறகும் இன்னும் பொறுப்பாளரே போடல. இதில் இருந்து தெரியலைய்யா அவரு தான் மீண்டும் மா.செ. என்று, சுந்தரமானவரின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வறாங்களாம். மொத்தத்தில் அவுங்க நடத்திய ஊர்வலம் இவுங்க கட்சியில கலகத்தை உண்டாக்கி இருக்கிறது தான் வேடிக்கை என்று மாற்று கட்சியினர் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிறையில சேலை சேல்ஸ் ஜோரா நடக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் ஜெயிலில் தொடர்ந்து வரும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளியே வராதுபோலிருக்குன்னு சொல்றது போல, நாள்தோறும் புதிது, புதிதாக ஏதாவது பிரச்னை ஏற்பட்டு வருதாம். கடந்த மாதம் சிறையில கைதியை தாக்கிய வழக்கில் உயர் அதிகாரிங்க உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியது. அதோடு, 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் சிறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில, வெயிலூர் பெண்கள் சிறையில, பணியாற்றும் காவலர் ஒருவர், சிறை பணியை தவிர சேலை சேல்ஸ் பண்ணிட்டு இருக்கிறாராம். அதுவும் சிறையில, பணியாற்றும் சக காவலர்களை சேலை வாங்கிக்கொள்ள கட்டாயப்படுத்தி சேல்ஸ் செய்றாராம். அதோட தனக்கு வேண்டியவங்களுக்கு சில சலுகைகளும் கொடுக்கிறாராம். சிறையில, கைதிகளை நல்வழிப்படுத்தும் வேலைய செய்ய சொன்னா, இப்படி சேலை சேல்ஸ்சில் ஆர்வமா இருக்கிறாரேன்னு சக காவலர்களே அதிருப்தியில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
The post பொறுப்பில் இருந்து விலக்கியவருக்கே மீண்டும் மா.செ. பதவியை கொடுக்கும் வேலை மும்முரமாக நடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.