பொருள் சோதனையின்போது டெல்லி விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் நகைகள் கொள்ளை: பெங்களூரு தம்பதி புகார்

4 hours ago 2

புதுடெல்லி: பெங்களூருவில் வசிக்கும் வங்கி ஊழியர் ராஜ் புரோகித்தும், அவரது மனைவியும் கடந்த 14ம் தேதி தங்கள் சொந்த மாநிலமான ராஜஸ்தானில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் டெல்லி வழியாக விமானம் மூலம் பெங்களூரு திரும்பினர்.

இந்நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சோதனைகளின்போது தங்களின் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.30,000 ரொக்கப்பணம் காணாமல் போய் விட்டதாக ராஜ் புரோஹித் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய காவல்நிலையத்தில் புகாரளித்து உள்ளார்.

அதில், “கடந்த 26ம் தேதி காலை 7.20 மணிக்கு டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய முனையம்-1ல் எங்கள் உடைமைகள் சோதனையிடப்பட்டன. அப்போது ஒரு சூட்கேசில் காதணிகள், வளையல்கள் உள்பட ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள், மற்றும் ஒரு பையில் ரூ.30,000 ரொக்க பணம் வைத்திருந்தோம். காலை 11.30 மணிக்கு புறப்பட்ட விமானம் மதியம் 2 மணிக்கு பெங்களூரூ வந்தது. நாங்கள் வீட்டுக்கு வந்த பிறகுதான் நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.

இதுகுறித்து இந்திரா காந்தி சர்வதேச விமான வளாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post பொருள் சோதனையின்போது டெல்லி விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் நகைகள் கொள்ளை: பெங்களூரு தம்பதி புகார் appeared first on Dinakaran.

Read Entire Article