
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டம் கிருஷ்ணகஞ்ச் பகுதியில் ஸ்டேஷனரி பொருள்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி வந்துள்ளார். அந்த சிறுமி சில பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து வாங்கிய பொருட்களை மீண்டும் கடையில் கொடுத்துள்ளார். பொருட்கள் பிடிக்கவில்லை கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கடைக்காரரிடம் கூறியுள்ளார்.
ஆனால், சிறுமி ஏற்கனவே இதுபோல் பல முறை பொருட்களை வாங்கிவிட்டு அதை மீண்டும் கடையில் கொடுத்து பணத்தை திரும்ப பெற்று சென்றுள்ளார். இந்த முறை சிறுமியிடமிருந்து பொருளை திரும்ப வாங்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி கடைக்காரரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். பின்னர், அங்கு இருந்த பிளேடால் கடைக்காரரின் கை, வயிறு பகுதியில் தாக்கியுள்ளார். இதில் கடைக்காரரின் கை, வயிறு பகுதியில் ரத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், கடையில் இருந்து வேகமாக ஓடினார். இதையடுத்து கடையில் இருந்த சிலர், ஓடிச்சென்று சிறுமியை பிடித்தனர். மேலும், பிளேடால் வெட்டியதில் காயமடைந்த கடைக்காரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், கடைக்காரர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.