
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு பிரசாந்த் லே-அவுட் பகுதியில் கடந்த 9-ந்தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பிரசாந்த் லே-அவுட்டை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் செய்திருந்தனர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் அனைவரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி பாராட்டுகளை தெரிவித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் நின்ற வாலிபர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார். இதை அந்த கட்டிடத்தின் அருகே தங்கும் விடுதியில் இருந்த வாலிபர்கள் பார்த்துள்ளனர்.
அப்போது எதிரே இருந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி கொண்டே இருந்தார். இதனால் கோபம் அடைந்த அந்த வாலிபர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட நபரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும் இதுகுறித்து அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளித்தனர்.
அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட நபர் சத்தீஸ்கரை சேர்ந்த சுபன்ஷூ சுக்லா (வயது 26) என்பதும், கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், 'ஆபரேஷன் சிந்தூர்' பாராட்டு நிகழ்ச்சி நடத்தியது பிடிக்காமல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், சுபன்ஷூ சுக்லாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டினர்.
அப்போது தங்கும் விடுதியில் இருந்த வாலிபர்கள் எடுத்த வீடியோ போலீசாருக்கு கிடைத்தது. மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அந்த ஆதாரங்களின் பேரில் நேற்று முன்தினம் இரவு சுபன்ஷூ சுக்லாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த ஒயிட்பீல்டு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.