
சென்னை,
வடபழனி முருகன் திருக்கோவிலில் 4 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருமணம் நடத்தி வைத்து, சீரிவரிசைப் பொருட்களை வழங்கினார்.
அதன்பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, திருக்கோவில்கள் சார்பில் ஏற்கனவே நடத்தப்பட்டு வந்த கட்டணமில்லா திருமணங்கள் நடத்துவதற்கான தடை உடைத்தெறிந்து, 2022 - 23ம் நிதியாண்டு முதல் 2024 - 25ம் நிதியாண்டு வரை மூன்று ஆண்டுகளில் முதலாம் ஆண்டு 500 ஜோடிகள், இரண்டாம் ஆண்டு 600 ஜோடிகள், மூன்றாம் ஆண்டு 700 ஜோடிகளுக்கு கட்டணமில்லா திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டன. இன்று வடபழனியில் நடைபெற்ற 4 ஜோடிகளுக்கான திருமணத்துடன் சேர்த்து இதுவரை திருக்கோவில்கள் சார்பில் 1,786 ஜோடிகளுக்கு 4 கிராம் தங்கத் தாலியுடன் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களை திருமணங்களை நடத்தி வைத்துள்ளோம்.
இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2,713 திருக்கோவில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான ரூ.7,197 கோடி மதிப்பிலான 7,436.70 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, 1,83,167 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 1,20,766 எல்லைக் கற்கள் பதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த நில மீட்பு வேட்டை தொடரும். மேலும், ஒளிவு மறைவற்ற வகையில், எந்தெந்த பணிகளுக்கு உபயதாரர்கள் நிதியளிக்கின்றார்களோ அதனை முறையாக பயன்படுத்துகின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது.
தினந்தோறும் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த ஒரு மாநில கட்சிக்கு தலைவர் இருப்பாரென்றால், அவர் அண்ணாமலை ஒருவராகத்தான் இருக்க முடியும். காமாலை நோய் பிடித்தவருக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல் எதை எடுத்தாலும் குறை சொல்லியே பழக்கப்பட்ட அண்ணாமலை நிதிநிலை அறிக்கை குறித்து நிறைவாக கூறுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
எங்களை வசை பாடியவர்களும் இன்றைக்கு வாழ்த்து சொல்கிற அளவிற்கு நிதிநிலை அறிக்கையை உலக அரங்கிலே தூக்கி பிடித்த, மதிநுட்பம் நிறைந்த அரசியல் தீர்க்கதரிசியாக முதல்-அமைச்சர் திகழ்கின்றார். நிதிநிலை அறிக்கையானது ஒன்றியம் கடந்து உலக நாடுகள் பாராட்டுகின்ற அளவிற்கு இருக்கின்ற போது மக்களுடைய ஆதரவைப் பெறாத அண்ணாமலை போன்றவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. வேளாண்மை நிதிநிலை அறிக்கையை உண்மையான விவசாய குடிமக்கள் வரவேற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு அவர் கூறினார்.