பொய்யான தகவலை பதிவிட மாட்டேன் என்று உறுதியளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: அதிமுக ஐ.டி. பிரிவு இணை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

4 weeks ago 3

சென்னை: சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்ப மாட்டேன் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு அதிமுக ஐ.டி பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. அப்போது, சென்னை மெரினாவில் மழை நீர் காரணமாக மின் கசிவு ஏற்பட்டதாக அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் தகவல் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, பொய்யான தகவல்களை பரப்பியதாக நிர்மல் குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நிர்மல் குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, நிர்மல் குமார் தொடர்ந்து உறுதிபடுத்தபடாத தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

உறுதிபடுத்தப்படாத தகவல்களை பதிவுகளை செய்யமாட்டேன் என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் உறுதி அளித்தும், தொடர்ந்து தவறான பதிவுகளை பதிவிட்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, எந்த ஒரு பதிவையும், உறுதிபடுத்தாமல் எக்ஸ் தளத்தில் பதிவிடமாட்டேன் என்றும், பொய்யான தகவல்களை பதிவிடமாட்டேன் என்றும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நிர்மல்குமாருக்கு உத்தரவிட்டு விசாரணையை 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை நிர்மல்குமாரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

The post பொய்யான தகவலை பதிவிட மாட்டேன் என்று உறுதியளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: அதிமுக ஐ.டி. பிரிவு இணை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article