எல்லோராலும் போற்றக்கூடிய தலைவர் கலைஞருக்கு சிலை வைத்து அரசு மரியாதை செய்யும்: புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி உறுதி

8 hours ago 2

 

புதுச்சேரி, மார்ச் 18: எல்லோராலும் போற்றக்கூடிய கலைஞருக்கு சிலை வைத்து அரசு உரிய மரியாதையை செய்யும் என புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ம் தேதி துவங்கியது. 12ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தார். தொடர்ந்து நேற்று சட்டசபை கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம் வருமாறு:

அனிபால் கென்னடி(திமுக): புதுச்சேரி மாநில அரசு வாக்குறுதி அளித்தபடி தலைவர் கலைஞருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதா? அதற்காக இடம் ஏதும் தேர்வு செய்யப்பட்டதா? இதுவரை ஏன் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

அமைச்சர் திருமுருகன்: அரசு சார்பில் இதுவரை குழு அமைக்கப்படவில்லை. கலைஞருக்கு சிலை அமைப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சிவா(திமுக): தவறான தகவலை அமைச்சர் கூறுகிறார். கடந்த ஆட்சியிலேயே குழு அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, இது கிடப்பில் போடப்பட்டடுள்ளது. சிலை அமைக்க சட்டமன்றம் எதிரே இடம் தேர்வு செய்யப்பட்டது. எங்களை பொறுத்தவரை இந்த சமூகத்துக்கும், மக்களுக்காகவும் பாடுபட்ட தலைவர்களுக்கு அரசு சிலை வைக்க வேண்டும். அதில் எந்த மாறுபட்ட கருத்தும், யாருக்கும் இருக்க முடியாது. அதன்படி மறைந்த தலைவர் கலைஞருக்கு சிலை வைப்பதோடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சிலை வைப்பதில் கூட எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அரசு அறிவித்துவிட்டு தற்போது இல்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.

அனிபால் கென்னடி: புதுச்சேரி இன்றைக்கு தனித்தன்மையோடு ஒரு மாநில அந்தஸ்து என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் கலைஞர்தான். மாநில இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தின் போது புதுச்சேரிக்கு ஆதரவாக நின்றவர் கலைஞர். அவருக்கு இந்த அரசு மரியாதை செலுத்த வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் சிவா: கடந்த ஐந்து ஆண்டுகளாக கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். தற்போது இந்த ஆட்சியும் நிறைவடையக்கூடிய சூழ்நிலையில் இனிமேல் செய்வார்களா? என்றால், இதற்கு மேல் வரப்போவதில்லை என்பதாகவே உங்கள் பதில் இருக்கிறது. இருப்பினும் சமூக நலனுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்ட தலைவர்களுக்கு சிலை வைப்பதில் தயக்கம் கூடாது. பெருந்தன்மையோடு தலைவர்களுக்கு சிலை அமைத்து இந்த அரசு மரியாதை செய்ய வேண்டும்.

நேரு(சுயேட்சை எம்எல்ஏ): தலைவர்களுக்கு சிலை வைக்கும் போது புதுச்சேரிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கும் சிலை அமைத்து மரியாதை செய்ய வேண்டும். தங்களது சொத்துகளையெல்லாம் மக்களுக்கு எழுதிக் கொடுத்த சின்ன சுப்பராயப்பிள்ளை, தியாகு முதலியார் போன்றவர்களுக்கு சிலை அமைத்து இந்த அரசு மரியாதை செலுத்த வேண்டும்.

முதல்வர் ரங்கசாமி: முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞருக்கு சிலை வைக்கும் எண்ணம் அரசுக்கு உண்டு. எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய தலைவர் கலைஞர். தமிழக மக்களுக்கும், தமிழுக்கும் அவர் ஆற்றிய பணி மிகப் பெரியது. எல்லோராலும் போற்றப்படக்கூடிய தலைவருக்கு, சிலை வைக்க வேண்டும் என்பதில் இந்த அரசுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

புதுச்சேரியின் நலனுக்கு குரல் கொடுத்தவர், பாடுபட்டவர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளால் பொதுஇடத்தில் சிலை வைக்க முடியவில்லை. இதுபோன்ற சூழலில் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது. நிச்சயமாக அவருக்கு மரியாதை அளிக்கக்கூடிய நிலையில் அவரது பெயரையும், அவருக்கு சிலையையும் தகுந்த இடத்தில் வைத்து அரசு மரியாதை செலுத்தும் என்றார்.

The post எல்லோராலும் போற்றக்கூடிய தலைவர் கலைஞருக்கு சிலை வைத்து அரசு மரியாதை செய்யும்: புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article