சென்னை : தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டு வரலாற்றையும் மறைக்க துடித்து பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் ரகுபதி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது என்ற வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு முடிவுகளை இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி செய்துள்ளார்.
தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டு வரலாற்றையும் மறைக்க துடித்து பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் நமது முதலமைச்சர் அவர்கள். இந்திய வரலாறு தெற்கில் தமிழ் நிலத்தில் இருந்தே இனி எழுதப்படும் அதை உலகிற்கு உணர்த்திய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,“5,300 ஆண்டுகளுக்கு முன்பே, உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது.
இப்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000-ம் ஆண்டின் முற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகமாயிருக்கும் என்று உறுதியாக கூறலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன்”இவ்வாறு தெரிவித்தார்.
The post பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அமைச்சர் ரகுபதி பெருமிதம் appeared first on Dinakaran.