*மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருவொற்றியூர் : மணலி மண்டலத்தில் மணல் கடத்தல் மற்றும் பொது இடங்களில் விதிமீறி குப்பை கழிவுகளை கொட்டும் லாரிகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மணலி மண்டலத்திற்கு உட்பட்ட சடையங்குப்பம், இடையஞ்சாவடி, கொசப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காலி நிலங்களில் சிலர் மாநகராட்சி அனுமதியின்றி தனியார் நிறுவனத்தின் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
பின்னர் அதில் உள்ள இரும்பு, செம்பு உள்ளிட்ட பொருட்களை எடுக்க குப்பையை தீ வைத்து கொளுத்துகின்றனர். இவ்வாறு குப்பை தீயிட்டு கொளுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மணல் கடத்தல் மற்றும் குப்பைக் கழிவுகளை கொண்டு வந்து, விதிமீறி பொது இடங்களில் கொட்டும் லாரிகளை கண்காணிக்க முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா மணலி மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் 12 இடங்களை தேர்வு செய்து அங்கு சிசிடிவி கேமராவை பொருத்த திட்டமிட்டனர். முதல் கட்டமாக 15வது வார்டு நாப்பாளையம் மேம்பாலம் மற்றும் இடையஞ்சாவடி, 16வது வார்டு சடையங்குப்பம் இணைப்பு சாலை உள்ளிட்ட 4 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
இதன் மூலம் குப்பை மற்றும் மணல் லாரிகள் கண்காணிக்கப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீதமுள்ள இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பொது இடங்களில் விதிமீறி குப்பை கொட்டும் லாரிகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா appeared first on Dinakaran.